சுஷ்மா மறைவு: உலகத் தலைவர்கள் அஞ்சலி

மதிப்பிர்க்குரிய தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பிரிவால் வாடும் எங்களுடைய நட்பு நாடான இந்தியாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
சுஷ்மா மறைவு: உலகத் தலைவர்கள் அஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷியா, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

வங்கதேசத்தின் சிறந்த தோழியாக திகழ்ந்தவர் சுஷ்மா, தற்போது வங்கதேசம் அதன் சிறந்த நட்பை இழந்துவிட்டது. இருநாட்டு உறவுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை. அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வங்கதேச முதல்வர் ஷேக் ஹஸீனா இரங்கல் தெரிவித்தார். 

இந்திய அரசுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாடுகளின் உறவு மேம்பாடு தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் இனிமையாக இருந்துள்ளது. சுஷ்மாவின் இந்த திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஸாரிஃப் வருத்தம் தெரிவித்தார்.

சுஷ்மா மிக எளிமையான தலைவர். சிறந்த நிர்வாகி. 2016-ல் ஜெருசலேம் பயணம் மறக்க முடியாதது. இந்தியா, இஸ்ரேல் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர். அவருடனான நட்பு மறக்க முடியாதது. சுஷ்மா மறைவு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என இந்தியாவுக்கான முன்னாள் இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மன் நினைவுகூர்ந்தார்.

என்னை எப்போதும் சகோதரனாக பாவித்து பழகக் கூடியவர். ஒவ்வொரு முறையும் சகோதரர் என்றே மரியாதையுடன் அழைப்பார். அவர் இன்று நம்முடன் இல்லை. இந்தியாவும், பஹ்ரைனும் அவரை இழந்து வாடுகிறது. எனது அன்புச் சகோதரியின் ஆன்மா சாந்தியடையட்டும் என பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் காலித் பின் அகமது அல் கலீஃபா தெரிவித்தார்.

மதிப்பிர்க்குரிய தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பிரிவால் வாடும் எங்களுடைய நட்பு நாடான இந்தியாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com