
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பதும், அதற்கு பதிலடியாக இந்தியாவுடனான இருதரப்பு உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டிருப்பதும் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி துஜாரிக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் குட்டெரெஸ் ஏன் தலையிட மறுக்கிறார்? என கேட்கப்பட்டது. அதற்கு துஜாரிக் அளித்த பதில்:
ஐ.நா. பொதுச் செயலருக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பொதுச் செயலருக்கு நன்கு தெரியும். அவர், நிலவரத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தானின் பல்வேறு தரப்புகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இரு நாடுகளையும் அதிகபட்ச பொறுமை காக்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரால் எழுதப்பட்ட கடிதம், ஐ.நா.வுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையின்படி, அது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் ஆவணமாக அளிக்கப்படும். அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள ஷரத்துகளை ஐ.நா. உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறது என்றார் அவர்.
அப்போது ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு எதிரானது ஆகாதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், "தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை' என்றார். ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மரியா பெர்னாண்டோ எஸ்பின்சோவின் செய்தித் தொடர்பாளர் மோனிகா கிரெய்லே கூறுகையில், "நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
மலேசியப் பிரதமர் வலியுறுத்தல்: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறிய கருத்து: தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடாமல், அதிகபட்ச பொறுமையை இந்தியாவும், பாகிஸ்தானும் கடைப்பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.