சீனாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்: இன்று தலைவர்களுடன் சந்திப்பு

சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் நகருக்கு வந்து சேர்ந்தார்.
சீனாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்: இன்று தலைவர்களுடன் சந்திப்பு

சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் நகருக்கு வந்து சேர்ந்தார். அவர் அந்நாட்டுத் தலைவர்களை திங்கள்கிழமை சந்திப்பார் என்று தெரிகிறது.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் மத்திய அமைச்சர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. 
வெளியுறவுச் செயலாளராக இருந்து அத்துறையின் அமைச்சராகியுள்ள முதல் நபரான ஜெய்சங்கர், சீனாவுக்கான இந்தியத் தூதராக கடந்த 2009 முதல் 2013ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், பெய்ஜிங் வந்ததுள்ள அவரது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.
எனினும், சீனாவில் எந்தத் தலைவர்களை சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இரு தலைவர்களும் இணைந்து கலாசாரம் மற்றும் மக்கள் பரிமாற்றத்துக்கான உயர்நிலைக் குழுவின் இரண்டாவது கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்துவார்கள். இது தொடர்பான முதல் கூட்டம் தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
பெய்ஜிங்கில் 4ஆவது இந்திய - சீன ஊடக மன்றத்தின் விழா நிறைவு நிகழ்ச்சியைத் தொடர்ந்து எஸ்.ஜெய்சங்கரும், வாங் யி-யும் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும், கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகமும் இணைந்து நடத்தும் கலை நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் பங்கேற்பர்.
ஜெய்சங்கரின் இந்த சீனப் பயணத்தின்போது இரு நாடுகளிடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்ரத்தை நடத்து உள்ள ஜெய்சங்கர், மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்காலாம் விவகாரம் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com