ஜப்பானுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் கெடுபிடி: தென்கொரியா அதிரடி

ஜப்பானுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் புதிய கெடுபிடிகளை தென் கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.


ஜப்பானுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் புதிய கெடுபிடிகளை தென் கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.
அதன்படி,  ஜப்பானை தென் கொரியா அதன் சொந்த புதிய ஏற்றுமதி நாடுகளின் பிரிவில் சேர்த்துள்ளது. 
இதன்மூலம், ஜப்பானுக்கு முக்கிய பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலைப் பெற 15 நாள்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
மேலும், தென் கொரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மூன்று ஆவணங்களை தாக்கல் செய்தால் போதும் என்ற தற்போதைய  நிலை மாறி ஐந்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் சங் யுன்-மோ திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடிப்படை விதிகளை அடிக்கடி மீறும் ஒரு நாட்டோடு நெருக்கமான உறவை பேணுவது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு தீர்வு காண்பதற்கு, ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது எங்களின் அவசியத் தேவையாக உள்ளது. 
அதன்படி, ஜப்பான் புதிய ஏற்றுமதி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்பிரிவில்  இடம்பெற்றுள்ள ஒரே நாடு தற்போது  ஜப்பான் மட்டுமே. மாற்றியமைக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும்.
ஜப்பானுடனான  பேச்சுவார்த்தைக்கு தென் கொரியா எப்போதும் திறந்த மனதுடன்  தயாராகவே உள்ளது என்றார் அவர்.
ஜப்பான் எந்தவிதமான அடிப்படை விதிமுறைகளை மீறி செயல்பட்டது என்பது குறித்து தென் கொரிய வர்த்தக அமைச்சர் உதாரணம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 
தென் கொரியாவுக்கான வர்த்தக அந்தஸ்தை குறைக்க ஜப்பான் அண்மையில் முடிவெடுத்தற்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கையை  மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com