ஹாங்காங் விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான தள்ளுவண்டிகளை தடையாகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டவர்கள்.
ஹாங்காங் விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கான தள்ளுவண்டிகளை தடையாகப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டவர்கள்.

அரசுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி: ஹாங்காங் விமான நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாமின் எச்சரிக்கையையும் மீறி, அந்த நகர விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாமின் எச்சரிக்கையையும் மீறி, அந்த நகர விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் மூலம், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஹாங்காங் அரசுக்கு அளித்து வரும் நெருக்கடியை அவர்கள் மேலும் அதிகரித்துள்ளனர்.
ஹாங்காங் எல்லையில் ராணுவத்தினரைக் குவிக்கும் விடியோக்கள் மூலம், கடந்த 10 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஹாங்காங் அரசுக்கு சீன அரசு அழுத்தம் கொடுத்துள்ள சூழலில், மீண்டும் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டில் ஒப்படைத்ததற்குப் பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வார இறுதி நாள்களில் நடைபெறும் போராட்டங்களை அடக்குவதற்காக போலீஸார் வன்முறையில் ஈடுபவதாகக் குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அதையடுத்து, திங்கள்கிழமை மதியத்துக்கு மேல் அனைத்து விமானப் போக்குவரத்தையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை விலக்கப்பட்டது.
எனினும், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதப்படுத்தப்பட்டும் இருந்ததால் பயணிகளின் அல்லல் தொடர்ந்தது.
இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமையும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு ஆடை அணிந்து அந்த விமான நிலையத்துக்கு வந்தனர்.
போராட்டங்கள் இனியும் தொடர்ந்தால் ஹாங்காங் மீள முடியாத படுகுழிக்குள் தள்ளப்படும் என்று  அரசின் தலைமை அதிகாரி விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி இந்த ஆர்ப்பாடம் நடைபெற்றது, மறுபடியும் விமானங்கள் ரத்தாகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
பரபரப்பாக இருந்த விமான நிலையத்தில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டம் தங்களுக்கு இடையூறாக இருந்தாலும், போராட்டக்காரர்கள் மீது அனுதாபம் இருப்பதாக சில பயணிகள் தெரிவித்தனர்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விமான சேவை பாதிப்பு:  இந்திய பயணிகளுக்கு அறிவுறுத்தல்
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்களால் விமான சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் இந்திய பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சென்ற திங்கள்கிழமை ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
 சகஜ நிலை திரும்பியதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஹாங்காங் விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில், ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை இந்திய பயணிகளுக்கான அறிவுறுத்தல் அடங்கிய அறிவிக்கையை தூதரக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுமக்களின் போராட்டத்தால் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆகஸ்ட் 13-இல் விமான சேவை வழக்கம் போல் தொடங்கியுள்ளது. இருப்பினும், போராட்டமானது திடீரென வலுப்பெறும் நிலையில் விமான சேவை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்பட அல்லது தாமதமாக வாய்ப்புகள் உள்ளது.    
எனவே விமான நிலைய நடவடிக்கைகளில் இயல்பு நிலை திரும்பும் வரை சிரமத்தை தவிர்ப்பதற்காக மாற்றுப் பயண வழிமுறைகளை கண்டறிய இந்திய பணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்கெனவே ஹாங்காங்கில் உள்ள இந்திய பயணிகள் மற்றும் அங்கு செல்லக் காத்திருக்கும் பயணிகள் அனைவரும் விமான பயணத்திற்கான கால அட்டவணை குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com