சுடச்சுட

  

  பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்

  By DIN  |   Published on : 16th August 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  flight

  வயல்வெளியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ரஷிய விமானம்.

  பறவை மோதியதால் என்ஜின் செயலிழந்த விமானம் அருகிலுள்ள வயல் வெளியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
  இந்த விபத்தில், அந்த விமானத்திலிருந்த 233 பேரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். இக்கட்டான நேரத்தில் அந்த விமானத்தை சாதுர்யமாக தரையிறக்கி அனைவரது உயிரையும் காப்பாற்றிய விமானிக்கு புகழாரங்கள் குவிந்து வருகின்றன.
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  ரஷிய தலைநகர்  மாஸ்கோவின் ஷுகோவ்ஸ்கி விமான நிலையத்திலிருந்து கிரிமீயாவின் சிம்ஃபெர்போல் நகருக்கு யுரல் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் வியாழக்கிழமை புறப்பட்டது.
  விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனேயே அந்த விமானத்தில் ஒரு பறவை மோதி, என்ஜினுக்குள் சிக்கிக் கொண்டது.
  இதனால் அந்த விமானம் நிலைதடுமாறியதையடுத்து, அதனை உடனடியாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.
  அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள வயல்வெளியில் இரு என்ஜின்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டு, விமானத்தின் சக்கரங்கள் மடக்கப்பட்ட நிலையில் அது தரையிறக்கப்பட்டது..வயல்வெளியில் உராய்வதன் மூலம் அதனை நிறுத்தும் நோக்கில் அவ்வாறு தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து, பயணிகள் அவரசகால வழியில் வெளியேற்றப்பட்டனர்.
  இதன் மூலம் விமானத்திலிருந்த 226 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பினர்.
  எனினும், இந்த விபத்தில் 55 பேருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டதும் அதனை அவசரமாகத் தரையிறக்க விமானிகள் எடுத்த முடிவு, தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு என்று ரஷிய பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டர் நெராட்கோ பாராட்டு தெரிவித்தார்.
  மேலும், விமானத்தின் தலைமை விமானி டமீர் யுசுபோவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai