அமெரிக்காவின் கடைசி நேர முயற்சி தோல்வி: சிறைப்பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் விடுவிப்பு

பிரிட்டனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பலை விடுவிக்க, அந்த நாட்டின் ஜிப்ரால்டர் பிரதேச உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல்.
கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல்.


பிரிட்டனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பலை விடுவிக்க, அந்த நாட்டின் ஜிப்ரால்டர் பிரதேச உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அந்தக் கப்பல் விடுவிக்கப்படுவதைத் தடுக்க அமெரிக்கா கடைசி நேரத்தில் முயன்றாலும், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜிப்ரால்டர் ஜலசந்தியில் கடந்த மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 கப்பலை விடுவிப்பது குறித்து, ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
இந்த நிலையில், அந்த எண்ணெய்க் கப்பலை விடுவிக்க வேண்டாம் என்று ஜிப்ரால்டர் அரசிடம் அமெரிக்க நீதித் துறை கோரிக்கை மனு தாக்கல் செய்தது.
அதையடுத்து, கிரேஸ் 1 கப்பல் குறித்த தீர்ப்பை நீதிமன்றம் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தது.
அமெரிக்க நீதித்துறையின் கோரிக்கை மனுவை பரிசீலித்து வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தலைமை நீதிபதி அந்தோனி டுட்லீ அளித்த தீர்ப்பில், கிரேஸ் 1 கப்பலை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான அமெரிக்க மனு எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல், தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு எண்ணெய் எடுத்துச் செல்லாது என்று ஈரான் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பதற்றம் தணிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தியில் பிரிட்டன் கடந்த மாதம் 4-ஆம் தேதி சிறைப்பிடித்தது.
இந்த நிலையில், தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெரோவை ஈரான் கடந்த மாதம் 19-ஆம் தேதி சிறைப்பிடித்தது.
இதனால் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. 
அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக  நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஈரான் எண்ணெக் கப்பலை விடுவிக்க தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com