ஹாங்காங் பிரச்னையை மனிதத் தன்மையுடன் தீர்த்தால்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நிபந்தனை

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சீனா மனிதத் தன்மையுடன் தீர்வு கண்டால்தான், அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை
ஹாங்காங் எல்லையையொட்டி அமைந்துள்ள சீனாவின் ஷென்ஷென் நகரில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவ கவச வாகனங்கள். நாள்: வியாழக்கிழமை.
ஹாங்காங் எல்லையையொட்டி அமைந்துள்ள சீனாவின் ஷென்ஷென் நகரில் குவிக்கப்பட்டுள்ள சீன ராணுவ கவச வாகனங்கள். நாள்: வியாழக்கிழமை.


ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சீனா மனிதத் தன்மையுடன் தீர்வு கண்டால்தான், அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொள்வது சாத்தியமாகும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதால், அந்த நாட்டில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
அந்த நிறுவனங்களின் கோடிக்கணக்கான ஊழியர்களது வேலைவாய்ப்பு, அமெரிக்காவால் கூடுதல் வரி விதிக்கப்படாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சென்று சேர்கிறது.
இதன் காரணமாக, கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்வதற்கு வகை செய்யும் வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள சீனா மிகுந்த ஆவலுடன் உள்ளது.
இருந்தாலும், முதலில் அந்த நாடு ஹாங்காங் போராட்டங்களை மனிதத் தன்மையுடன் கையாள வேண்டும்.
ஹாங்காங் பிரச்னையை சீன அதிபர் ஷி ஜின்பிங் மனிதாபிமானத்துடன் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறேன்.
அவரை நான் நேரில் சந்தித்துப் பேசினால், வர்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டில் ஒப்படைத்ததற்குப் பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், போராட்டங்கள் இனியும் தொடர்ந்தால் ஹாங்காங் மீள முடியாத படுகுழிக்குள் தள்ளப்படும் என்று ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் விடுத்த எச்சரிக்கையும் மீறி, அந்த நகர விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சீனாவிலிருந்து வந்தவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாகவும், அது பயங்கரவாதச் செயலுக்கு ஒப்பானது எனவும் சீனா சாடியது.
ஹாங்காங் போராட்டங்களை சீனா பயங்கரவாதமாகச் சித்திரித்தது அது இரண்டாவது முறையாகும்.
ஏற்கெனவே, ஹாங்காங்கில் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. அத்துடன், ஹாங்காங் எல்லையை நோக்கி சீன 
ராணுவத்தினர் கவச வாகனங்களில் விரையும் விடியோவையும் அந்த நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டது.
இந்தச் சூழலில், விமான நிலைய சம்பவத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு சீனா பேசியுள்ளது, போராட்டங்களை அடக்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இந்த நிலையில், ஹாங்காங்கை நோக்கி ஏராளமான சீனப் படையினர் அனுப்பப்படுவதை அமெரிக்க உளவுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது அவர் இவ்வாறு நிபந்தனை விதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com