காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தானும், அதன் நட்பு நாடான சீனாவும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நடைபெற்ற  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தானும், அதன் நட்பு நாடான சீனாவும் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நடைபெற்ற  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது குறித்து புகார் தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது. இதேபோல், பாகிஸ்தானின் நட்பு நாடும்,   பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியது.

சீனாவின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளின் பிரதிநிதிகள் கூடி விவாதம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இக்கூட்டம் நீடித்தது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் பெரும்பாலானவை, காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவகாரம் என்றும், அந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட இருநாடுகளே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தன. இது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க நினைத்த பாகிஸ்தானின் முயற்சிக்கு கிடைத்த தோல்வியாகும்.

கூட்டத்தில் விவாதம் நடைபெற்றபோது, முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் தகுந்த பதில் மூலம் இந்தியா தவிடுபொடியாக்கியது. இந்தியத் தரப்பில், " ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முடிவு அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்டது; அது எப்படி பிராந்திய அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவாக முடியும்? கூட்டாட்சி அமைப்புத் தொடர்பான நடவடிக்கை எப்படி, எல்லைக்கு அப்பால் (பாகிஸ்தானில்) தாக்கத்தை ஏற்படுத்தும்? ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கெனவே கையெழுத்தாகியுள்ள சிம்லா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் புகார் தெரிவித்திருந்தது. இதுவும் பாகிஸ்தானுக்கு பின்னடைவையே தந்தது. ஏனெனில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்கு எதிராக மனித உரிமை  மீறல்  குற்றச்சாட்டு இருந்தது. அப்படியிருக்கையில், மனித உரிமைகள் மீறல் குறித்து சீனா பேசியது பின்னடைவைத் தந்தது. இந்தியத் தரப்பில், "ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாக பாகிஸ்தான் கருதுமெனில், பாகிஸ்தான்- சீனா பொருளாதார வழித்தடத் திட்டத்தை என்னவென்று தெரிவிப்பது? எத்தனை மாற்றங்களை அந்நாடுகள் செய்து விட்டன?' என பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, டொமினிக்கன் குடியரசு, ஈகுவடாரியல் கினியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தன. 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்னொரு நிரந்தர உறுப்பு நாடான பிரிட்டன், இருதரப்பும் அமைதியும், பொறுமையும் காக்க வேண்டுமென வலியுறுத்தியது. இந்தோனேசியா தரப்பில், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பதற்கு கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும் இருநாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான நாடுகள் ஆதரவு தந்தது, இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.  பாகிஸ்தான் ஆரம்பம் முதலே  பின்னடைவைச் சந்தித்தது.  பாதுகாப்புக் கவுன்சில் வெளிப்படையாக கூடி விவாதிக்க வேண்டுமென்ற அந்நாட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அதிகாரபூர்வமற்ற வகையில், மூடப்பட்ட அறையில் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் அரசின் பிரதிநிதி பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்ற அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பாதுகாப்புக் கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் போலந்திடம் பாகிஸ்தானும், சீனாவும் கோரிக்கை விடுத்தன. இதை பிரிட்டனும் ஆதரித்தது.  எனினும், இதை பெரும்பாலான நாடுகள் ஆதரிக்கவில்லை. எனவே, போலந்து தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தனிப்பட்ட நாட்டின் கருத்து என்ற வகையில், சீனாவும், பாகிஸ்தானும் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் ஜாங் ஜுன், பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி ஆகியோர் தனிப்பட்ட நாடு என்ற வகையில் தனித்தனியே அறிக்கைகளை செய்தியாளர்களிடம் வாசித்தனர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்று விட்டனர்.

பாகிஸ்தான் செய்தியாளர்களுடன் கைகுலுக்கிய இந்தியப் பிரதிநிதி: இதைத் தொடர்ந்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி சையது அக்பருதீன், இந்தியாவின் அறிக்கையை செய்தியாளர்களிடம்  வாசித்தார். மேலும் செய்தியாளர்களின் 5 கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதில் 3 கேள்விகளை எழுப்பும் வாய்ப்பை பாகிஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், "பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டு விட்டதா?' எனக் கேட்டார். அதற்கு அக்பருதீன், "அது இயல்பான சூழ்நிலையில் நடக்கக்கூடியது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுடன் பேச்சு கிடையாது. முதலில் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்; அதன்பிறகு பேச்சுவார்த்தை தொடங்கப்படும்' என்றார்.

இன்னொரு செய்தியாளர், "பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப்படும்?' எனக் கேள்வியெழுப்பினார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர்கள் 3 பேரையும் நோக்கிச் சென்று, அவர்களது கைகளை அக்பருதீன் குலுக்கினார். பின்னர் அவர், "சிம்லா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்து, ஏற்கெனவே நட்புக்கரத்தை நீட்டிவிட்டோம்; பாகிஸ்தானின் பதிலுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com