அமெரிக்கா சிறைபிடிக்க உத்தரவிட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மாயம்

அமெரிக்காவால் சிறைபிடிக்க உத்தரவிடப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் மாயமாகி விட்டது.
கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் (கோப்புப் படம்)
கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் (கோப்புப் படம்)


அமெரிக்காவால் சிறைபிடிக்க உத்தரவிடப்பட்ட ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் மாயமாகி விட்டது.
தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டர் ஜலசந்தியில் பிரிட்டன் கடந்த மாதம் 4-ஆம் தேதி சிறைபிடித்தது.
இந்த நிலையில், தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெரோவை ஈரான் கடந்த மாதம் 19-ஆம் தேதி சிறைபிடித்தது.
இதனால் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கிரேஸ் 1 கப்பலை விடுவிப்பது குறித்து, ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. எனினும், அந்த எண்ணெய்க் கப்பலை விடுவிக்க வேண்டாம் என்று ஜிப்ரால்டர் அரசிடம் அமெரிக்க நீதித் துறை கடைசி நேரத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை நிராகரித்த ஜிப்ரால்டர் உச்சநீதிமன்றம், ஈரான் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அதை சிறைபிடிக்க அமெரிக்கா உத்தரவிட்டது. இதுகுறித்து அமெரிக்க சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு நீதித் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த ஆணையில், சட்டவிரோதமாக எண்ணெய் ஏற்றி வந்த ஈரானின் கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் சிறைபிடிக்கப்பட வேண்டும். மேலும், அந்தக் கப்பலில் உள்ள எண்ணெயையும் அதிகாரிகள் கைப்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜிப்ரால்டர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேஸ் 1 எண்ணெய்க் கப்பல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு சிறிது நேரத்துக்கு முன்பு திடீரென புறப்பட்டு மொராக்கோ, லைபிரீயா வளைகுடா இடையேயான சர்வதேச கடல்பகுதி வழியாக எங்கேயோ சென்று விட்டது. அது சென்ற இடம் குறித்து தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து ஜிப்ரால்டர் அரசை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் தகவல் அறிய முயன்றனர். ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com