காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாட இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாட இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நகர்வு இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. காஷ்மீர் பிரச்னையை உள்நாட்டு விவகாரம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும், பாகிஸ்தானில் இருந்து வெளியுறவுத் துறை அமைச்சர் அல்லது பிரதமர் இந்தியா குறித்து தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ஏஆர்ஒய் செய்தி சேனலிடம் பேசிய குரேஷி, "காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடுவதாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார். 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உட்பட அனைத்து மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பப்படும். இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்படும்" என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com