தலிபான்களின் அமைதிப் பேச்சுடன் காஷ்மீர் விவகாரத்தை தொடர்புபடுத்தும் பாகிஸ்தானின் முயற்சி பொறுப்பற்றது

அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தான்-தலிபான்கள் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கையோடு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்புபடுத்துவது பொறுப்பற்ற செயல்
தலிபான்களின் அமைதிப் பேச்சுடன் காஷ்மீர் விவகாரத்தை தொடர்புபடுத்தும் பாகிஸ்தானின் முயற்சி பொறுப்பற்றது

ஆப்கானிஸ்தான் கண்டனம்
அமெரிக்காவின் தலைமையில் ஆப்கானிஸ்தான்-தலிபான்கள் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கையோடு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்புபடுத்துவது பொறுப்பற்ற செயல் என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. 
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆஸாத் மஜீத் கான், சமீபத்தில் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் விவகாரத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழல், ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கையை பாதிக்கும்  என்று அவர் கூறியிருந்தார். 
இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ரோயா ரஹ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
காஷ்மீர் நிலவரம் தொடர்பாகக் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான்-தலிபான்கள் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கையுடன் தொடர்புபடுத்துவது தேவையற்ற, பொறுப்பற்ற செயலாகும். அந்த வகையில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆஸாத் மஜீத் கான் தெரிவித்த கருத்துக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. 
காஷ்மீர் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம். ஆனால், அதனுடன் பாகிஸ்தான் எங்களை (ஆப்கானிஸ்தான்) தொடர்புபடுத்துகிறது. இது, ஆப்கானிஸ்தானில் நிலவும் வன்முறையை நீண்ட காலத்துக்கு நீடிக்க வைக்கும் பாகிஸ்தானின் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். 
தலிபான்களை எதிர்க்கவோ, அவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவோ முடியாததற்கு பாகிஸ்தான் கூறும் காரணங்கள் அற்பமானவை. காஷ்மீர் விவகாரம் காரணமாக, பாகிஸ்தான் தனது படையை ஆப்கானிஸ்தானுடனான மேற்கு எல்லைப் பகுதியிலிருந்து, இந்தியாவுடனான கிழக்கு எல்லைப் பகுதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருப்பதாக பாகிஸ்தான் தூதர் கூறுகிறார். 
உண்மையில் ஆப்கானிஸ்தானிடம் இருந்து பாகிஸ்தானுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்கள் மூலம் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது என்று ரோயா ரஹ்மானி அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 
இதேபோல், பாகிஸ்தான் தூதரின் பேச்சுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com