ஹாங்காங்கில் பிரிட்டன் தூதரக அதிகாரி கைது

ஹாங்காங்கில் பிரிட்டன் தூதரக அதிகாரியை சீன அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் போராட்டத்தில், பிரிட்டன் ஆட்சிக் காலத்து கொடியை ஏந்தி வரும் இளைஞர் (கோப்புப் படம்).
ஹாங்காங் போராட்டத்தில், பிரிட்டன் ஆட்சிக் காலத்து கொடியை ஏந்தி வரும் இளைஞர் (கோப்புப் படம்).


ஹாங்காங்கில் பிரிட்டன் தூதரக அதிகாரியை சீன அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங்கின் ஹெச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஹாங்காங்கிலுள்ள பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஓர் அதிகாரி, அந்த நகரையொட்டிய சீன நகரமான ஷின்ஷெனுக்கு அண்மையில் பயணம் செய்தார்.
ஒரு நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அந்த நகருக்குச் சென்ற அவர், அதற்குப் பிறகு ஹாங்காங் திரும்பவில்லை.
ஷென்ஷென் நகரில் அவரை சீன அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டன் கவலை: தங்களது தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாங்காங்கிலிருந்து ஷென்ஷென் சென்ற எங்களது தூதரக அதிகாரி சீனாவால் கைது செய்யப்பட்ட தகவல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் மற்றும் ஷென்ஷென் நகரம் அமைந்துள்ள குவாங்டாங் மாகாண அரசுகளிடம் விவரம் கேட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் குவிங் அரசுடன் பிரிட்டன் கடந்த 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட 99 ஆண்டு குத்தகை ஒப்பத்தின் கீழ் ஹாங்காங் நகரம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹாங்காங்கை சீன அரசிடம் பிரிட்டன் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைத்தது.
இந்தச் சூழலில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இந்தப் போராட்டங்களை பிரிட்டன் தூண்டிவிடுவதாக ஏற்கெனவே பல முறை சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், பிரிட்டன் தூதரக அதிகாரியை சீனா கைது செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com