ஆப்கனில் இருந்து படைகள் முழுமையாக வாபஸ் இல்லை: டிரம்ப்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வாபஸ் பெறப்படமாட்டார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் (கோப்புப் படம்).
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் (கோப்புப் படம்).


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வாபஸ் பெறப்படமாட்டார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஆப்கன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் அனைவரையும் திரும்ப அழைப்பதாக வாக்குறுதி அளித்திருந்த அவர், தற்போது இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிபர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் அமெரிக்க வீரர்களை திரும்ப அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், படையினர் திரும்ப அழைக்கப்பட்ட பின்னரும் எங்களது உளவுப் பிரிவினர் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இருப்பார்கள்.
மேலும், குறைந்த அளவிலான படையினர் அங்கு தொடர்ந்து பணியாற்றுவார்கள்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில வீரர்கள் அழைத்து வரப்படவிருக்கிறார்கள். எனினும், அங்கு நமது படையினர் இருக்க வேண்டியது அவசியமாகும்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்த நிலை மீண்டும் திரும்பாது என்று தலிபான்கள் உறுதியளித்து வருகின்றனர்.
எனினும், அவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆப்கானிஸ்தான் என்பது போரிடுவதற்கு மிகவும் கடினமான பிரதேசமாகும். அந்த நாட்டுக்குள் காலடி வைத்ததால்தான் சோவியத் யூனியன் ரஷியாவாக சுருங்கிப் போனது.
அந்த நாட்டில் அமெரிக்கப் படையினர் 18 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகின்றனர்.
அவர்கள் அங்கு தற்போது போரிடவில்லை. அதற்குப் பதிலாக காவல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 
இது மிகவும் கேலிக்குரியது ஆகும் என்றார் அவர்.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அதையடுத்து, அமெரிக்கப் படையினருடனும், அரசுப் படையினருடனும் தலிபான்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
இந்தச் சண்டையில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், தற்போது அந்த நாட்டில் இருக்கும் சுமார் 13,000 அமெரிக்கப் படையினரை திரும்ப அழைப்பதற்கும் தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் மூலம், ஆப்கானிஸ்தானை அமெரிக்கா மீண்டும் தலிபான்களின் வசம் ஒப்படைக்கலாம் என்று அச்சம் நிலவி வந்தது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com