அமேசான் காட்டில் என்ன நடந்தது? இது சர்வதேசப் பிரச்னையா?

அமேசான் என்றால் படகுகளை அழிக்க வல்லவன் என்று அங்குள்ள மக்களின் மொழியின் அர்த்தம்.
அமேசான் காட்டில் என்ன நடந்தது? இது சர்வதேசப் பிரச்னையா?

அமேசான் என்றால் படகுகளை அழிக்க வல்லவன் என்று அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் அர்த்தம்.

இங்குள்ள நதியின் செழிப்பால்தான் இக்காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. இங்கு மழை மிக அதிகம் பெய்வதால் மழைக்காடுகள் என்று அழைப்பார்கள். அமேசான் மழைக்காடுகள் என்று அழைக்கப்படும் இப்பகுதி 5.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் படர்ந்து விரிந்துள்ளது. அமேசன் மழைக்காடு  பிரேசில், பிரன்ச் கயானா, சுரினம், ஈக்குவடோர், பொலிவியா, பெரு, கொலம்பியா,வெனிசுலா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. 

உலகின் உயிர் இனங்கள் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில்தான் வசிக்கின்றன. ஆபத்தான உயிரினங்கள் இங்கு பல உள்ளன. உலகில் உள்ள பறவைகளில் ஐந்தில் ஒரு பகுதி அமேசான் காட்டில்தான் உள்ளன என்கிறது ஒரு புள்ளி விபரம். மேலும் இக்காடுகளில் பாம்புகள் ஏராளம் உண்டு. அனகொண்டா போன்ற பாம்பு வகைகள் அதிகம் காணப்படும் இடமிது. நிலத்தில் மட்டுமல்லாமல் நீரிலும் வாழும் இயல்புடையது இந்த அனகொண்டா வகைப் பாம்புகள்.

பல அரிய வகை மூலிகைகள் இக்காடுகளில் உள்ளன. உலகில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸிட் பெரும்பகுதி இங்கிருந்துதான் கிடைக்கிறது. இப்படிப் பல பல வியப்புக்களையும், கற்பனைக்கு எட்டாத ஆச்சரியங்களையும், விடுவிக்க முடியாத மர்மங்களையும் தன்னகத்தே கொண்ட அமேசான் 'பூமியின் நுரையீரல்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த அமேசான் காடுகளில்தான் கடந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 முறை காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பிரேசிலில் உள்ள இந்த அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்தது. குறிப்பாக ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று பதிவாகியுள்ளது. அமேசான் காடுகளில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வது வழக்கம்தான், ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை  மின்னல் தாக்கி இயற்கையாகவே காட்டுத் தீ ஏற்படும்.  என்றாலும், இம்முறை மிக அதிக முறை நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2018-ம் ஆண்டு பதிவான காட்டுத்தீ தரவுகளோடு ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு இதுவரை இச்சம்பவம் 83 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது கவலைக்குரிய விஷயம் என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பதிவு செய்துள்ளது. 

அமேசான் காடுகளில் இந்த ஆண்டு காட்டுத் தீ ஏற்படக் காரணம் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் என சூழலியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். சயீர் வலதுசாரி கருத்தியல் கொண்டவர் என்பதால் அவர் மீது இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்கின்றனர் அரசு தரப்பினர். உண்மையில் சயீர் பொல்சனாரூவின் கொள்கைகள் காட்டை அழிப்பதை ஊக்குவிக்கிறது என்றும், பெரும் வனப்பகுதிகளை அழித்து பயிர் செய்யவும், மரங்களை வெட்டி மைதானமாக்கி காட்டை மேய்ச்சல் நிலமாக மாற்றவும் அவர் விரும்புகிறார் என்பது அவர் மீதான தொடர் குற்றச்சாட்டு. மேலும் தற்போது ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத் தீயை உடனடியாக அணைக்க போதிய முயற்சிகளை அவருடைய அரசு எடுக்கவில்லை என்றும் சூழலியலாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

சயீர் பொல்சனாரூ இதற்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பதில் அளிக்கையில், 'அமேசான் காட்டுத் தீயை அணைக்க எங்களிடம் போதுமான வசதிகள் இல்லை, எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடிந்தது’ என்று பதில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டதற்கு அரசு சாராத சில அமைப்புகள்தான் காரணமாக இருக்கும், காரணம் அவர்களுக்கான நிதியை குறைத்ததால் பழிவாங்கும் விதமாக அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்’ என்று கூறினார். இதற்கான ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் 'நான் அவர்கள் மீது சந்தேகம்தான் படுகிறேன், குற்றம் சாட்டவில்லை’ என்றார் சயீர் பொல்சனாரூ.

உண்மையில் இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டழிப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவது அமேசன் காடுகளில் வாழும் பழங்குடியினர்தான். கிட்டத்தட்ட 9 லட்சம் பழங்குடி மக்கள் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இயற்கையை அழிக்க மனிதர்களுக்கு உரிமை இல்லை என்பது அவர்கள் வாதம்.

அமேசானில்தானே காட்டுத் தீ இதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று மற்ற நாட்டினர் நினைக்க வேண்டாம். இதற்கான பதிலை ஃபிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான ஒரு பதிலை பதிவிட்டுள்ளார். 'நம் வீடு இப்போது பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. பூமியின் ஆக்சிஜனில் 20 சதவிகிதம் அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. எனவே இது ஒரு சர்வதேச நெருக்கடி’ என்று பதிவிட்டுள்ளார். சயீர் பொல்சினாரூ முன்னர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது 'பருவ நிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி சர்வதேச அரசியல் பிரச்னையில் அமேசான் காடு சிக்கியிருப்பது வருந்தத்தக்கது. 'World Wildlife Fund For Nature' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு இது குறித்து கூறுகையில், 'பூமியின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகளில் அழிப்பு அதிகமானால், பூமியில் அதிக aளவில் கார்பன் டை ஆக்ஸைட் பரவ நேரிடும். இது பருவ நிலை மாற்றத்திற்கு முக்கிய பங்காகவும் ஆகிவிடும்’ என்று எச்சரித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டுமெனில் அமேசான் காடு செழிப்பாக உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

புகைப்படம் நன்றி - ராய்டர்ஸ் / இன்ஸ்டாகிராம் - நிக் ரோஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com