அமேசான் மழைக்காடுகளில் தீ: ஐ.நா., பிரான்ஸ் கவலை

பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் அபாய அளவில் தீ பற்றி வருவது குறித்து ஐ.நா. அமைப்பும், பிரான்ஸும் கவலை தெரிவித்துள்ளன.
அமேசான் காட்டுத் தீ ( நாசாவின் செயற்கைக்கோள் படம்).
அமேசான் காட்டுத் தீ ( நாசாவின் செயற்கைக்கோள் படம்).


பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் அபாய அளவில் தீ பற்றி வருவது குறித்து ஐ.நா. அமைப்பும், பிரான்ஸும் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் பிரேசிலில் சுமார் 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும்.
இந்த காட்டுத் தீ சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை. எனினும், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமண்டலத்தில் சாவ்பாலோ உள்ளிட்ட பல்வேறு பிரேசில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பூமியின் வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்ற அபாயத்தை எதிர்கொண்டுள்ள நாம், ஆக்ஸிஜன் மற்றும் உயிரியக்கத்துக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அமேசான் மழைக்காடுகள் சேதமடைவதை தாங்க முடியாது என்று தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பிரச்னை: பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், உலகுக்கு 25 சதவீத ஆக்ஸிஜனைத் தரும் அமேசான் மழைக் காடுகள், இந்த பூமியின் நுரையீரலாகும்.
அது பற்றி எரியும் விவகாரம், சர்வதேச பேரிடர் ஆகும். எனவே, இந்த விவகாரத்துக்கு சர்வதேச நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலனியாதிக்க மனோநிலை!
அமேசான் காட்டுத் தீ சம்பவங்கள் தங்களது உள்நாட்டு விவகாரம் எனவும், இதில் தலையிடுவதன் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தனது காலனியாதிக்க மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், அமேசான் காட்டுத் தீ குறித்து ஜி-7 மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்பது, அவரது காலனியாதிக்க மனோநிலையை பிரதிபலிக்கிறது.
ஆனால், இந்த 21-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸின் காலனியாதிக்கத்துக்கு எந்த இடமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com