நவாஸ் ஷெரீஃபுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்: பஞ்சாப் மாகாண அரசு மறுப்பு

பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்ப பஞ்சாப் மாகாண அரசு
நவாஸ் ஷெரீஃபுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்: பஞ்சாப் மாகாண அரசு மறுப்பு


பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்ப பஞ்சாப் மாகாண அரசு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.
இதனால் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சிக்கும், மாகாண ஆளும் கட்சியான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் தி டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சிறப்பு வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு பஞ்சாப் மாகாண சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சிறை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
தற்போது சிறைத் துறையிடம் இருக்கும் ஆம்புலன்ஸில் இருதய நோய் முதலுதவிக்கான பிரத்யேக வசதிகள் இல்லாததால் அதிகாரிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர். எனினும், லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெளிநாட்டு அதிகாரிகள், மாகாண பேரவை உறுப்பினர்கள், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்து வசதிகள் அளிப்பதற்கான செலவுகள் அதிகமிருப்பதால், நவாஸ் ஷெரீஃபுக்காக சிறப்பு ஆம்புலன்ஸை அனுப்ப முடியாது என்று அந்த மருத்துவமனைகள் தெரிவித்ததாக சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது என்று தி டான் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, சிறையில் நவாஸ் ஷெரீஃபுக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தலைமையிலான பஞ்சாப் மாகாண அரசு நவாஸுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் வசதியை மறுத்துள்ளது இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com