இரு தரப்பு உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது: பாகிஸ்தான் கருத்து

இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பவை மதம்சார்ந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவு என்பது மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது: பாகிஸ்தான் கருத்து


இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பவை மதம்சார்ந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகியவற்றுக்கு இருநாள்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க அந்நாடு மேற்கொண்ட முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள், தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று பாகிஸ்தான் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகியவை மோடியை கெளரவித்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், தங்கள் நாட்டு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் சாதிக்கின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தை காரணம் ஏதும் கூறாமல் ரத்து செய்தது. இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்காததை அடுத்து, அந்நாட்டு மக்கள் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ள கருத்தை அந்நாட்டில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட அனைத்து நாடுகளுக்கும் பிற நாடுகளுடனான இருதரப்பு உறவு தொடர்பாக முடிவெடுக்க உரிமை உள்ளது.
மதம் சார்ந்த உணர்வுகள் என்பவை பிறநாடுகளுடனான உறவுகளுக்கும், சர்வதேச அளவிலான நட்புணர்வுக்கும் அப்பாற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக முதலீடுகள் தொடர்பான உறவுகள் உண்டு.
நான் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். அப்போது, காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து எடுத்துரைப்பேன். 
அந்நாட்டுடன் பாகிஸ்தானுக்கும் சிறப்பான நல்லுறவு உண்டு. எனவே, அந்நாட்டுத் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தரப்பின் நிலைப்பாட்டை உணரவைப்பேன். பாகிஸ்தானுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகம் விருது வழங்கி கெளரவித்தது பெரிய விஷயம் இல்லை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க குரேஷி முயற்சித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com