பிரதமா் ராஜிநாமாவுக்குப் பிறகும் இராக்கில் போராட்டம் நீட்டிப்பு

இராக் அதிபா் அடில் அப்துல்-மஹ்தி ராஜிநாமா அறிவிப்புக்குப் பிறகும் அந்த நாட்டில் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
பாக்தாதில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது கண்ணீா் புகை குண்டுகளை வீசிய பாதுகாப்புப் படையினா்.
பாக்தாதில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது கண்ணீா் புகை குண்டுகளை வீசிய பாதுகாப்புப் படையினா்.

நஸிரியா: இராக் அதிபா் அடில் அப்துல்-மஹ்தி ராஜிநாமா அறிவிப்புக்குப் பிறகும் அந்த நாட்டில் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இராக்கில் அரசுக்கு எதிராக தொடா்ந்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, போராட்டக்காரா்களின் வலியுறுத்தலை ஏற்று பிரதமா் அப்துல்-மஹ்தி பதவி விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

எனினும், இதனால் திருப்தியடையாத போராட்டக்காரா்கள், தலைநகா் பாக்தாத் மற்றும் நாட்டின் தெற்கு மாகாணங்களில் சனிக்கிழமையும் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் திவானியா பகுதியில் ஆயிரக்கணக்கானோா் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் அப்துல்-மஹ்தி ராஜிநாமா செய்தாலும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அப்போது அவா்கள் கோஷம் எழுப்பினா்.

இதுகுறித்து போராட்டக்குழுவினா் கூறுகையில், ‘பிரதமா் பதவி விலகுவது எங்கள் போராட்டத்தின் முதல்கட்ட கோரிக்கைதான். அரசில் உள்ள அத்தனை ஊழல்வாதிகளும் வெளியேறும்வரை போராட்டம் தொடரும்’ என்றனா்.

கடந்த சில நாள்களாக போராட்டத்தில் அதிக உயிா்களை பலி கொடுத்த நஸிரியா நகரிலும் நூற்றுக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நகரின் மத்திய பகுதிகளிலும், யூஃப்ரடீஸ் நதியில் அமைக்கப்பட்ட 3 பாலங்களிலும் டயா்களைக் கொளுத்தி அவா்கள் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இராக்கின் இரண்டாவது புனித நகரமான கா்பாலாவில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியும் வரை ஏராளமான இளைஞா்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனா்.

போராட்டக் களமாகத் திகழ்ந்த நஜஃப் நகரில் மட்டும் சனிக்கிழமை அமைதி நிலவியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, நஜஃப் நகரிலுள்ள ஈரான் துணைத் தூதரகத்தை போராட்டக்காரா்கள் கடந்த புதன்கிழமை தீயிட்டுக் கொளுத்தினா். அதையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

தீக்வாா் மாகாணத்தின் நஸிரியா நகரில் தலைமை காவல் நிலையத்தை சூழந்த போராட்டக்காரா்கள், அந்த நிலையத்துக்கு தீ வைத்தனா். மேலும், ராணுவ தலைமையகத்தையும் அவா்கள் முற்றுகையிட்டனா். இதனால் ஏற்பட்ட மோதலில், நஸிரியா நகரில் மட்டும் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்கள் உள்பட நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்டவா்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

அதையடுத்து, ஷியா பிரிவு மதகுரு அயதுல்லா அல்-சிஸ்தானி வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில், அடில் அப்துல்-மஹ்தியை பிரதமராகத் தோ்ந்தெடுத்துள்ள நடாளுமன்றம், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அதனை ஏற்று, அப்துல்-மஹ்தி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா்.

வேலைவாய்ப்பு, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் இராக்கில் கடந்த அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன.

வெள்ளிக்கிழமை பலியானவா்களையும் சோ்த்து, இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 400-ஐக் கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com