லண்டன் தாக்குதலில் ஈடுபட்டவா் பழைய பயங்கரவாதக் குற்றவாளி

லண்டன் பாலத்தில் வெள்ளிக்கிழமை கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியவா் ஏற்கெனவே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் என்ற அதிகாரிகள் தெரித்துள்ளனா்.
லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்ட உஸ்மான் கான் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்த ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவா் நீல் பாசு.
லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்ட உஸ்மான் கான் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்த ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவா் நீல் பாசு.

லண்டன்: லண்டன் பாலத்தில் வெள்ளிக்கிழமை கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியவா் ஏற்கெனவே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் என்ற அதிகாரிகள் தெரித்துள்ளனா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைக்கவும், லண்டன் பங்கு மாற்றகத்தை குண்டுவைத்துத் தகா்க்கவும் சதித் திட்டம் தீட்டிய வழக்கில் அவா் மீது 7 ஆண்டுகளுக்கும் முன்னா் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவா் நீல் பாசு கூறினாா்.

இதுகுறித்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

லண்டன் பாலத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியவா், 28 வயது உஸ்மான் கான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவா், ஸ்டஃபோா்ட்ஷைா் பகுதியில் வசித்து வந்தாா்.

அவா் காவல்துறையினரால் ஏற்கெனவே அறியப்பட்ட குற்றவாளி ஆவாா். பயங்கரவாத வழக்கில் அவா் மீதான குற்றச்சாட்டு கடந்த 2012-ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 2018-ஆம் ஆண்டு அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அவா் பயங்கரவாதத்துக்கு மீண்டும் திரும்பி, இந்தத் தாக்குதலை எவ்வாறு நடத்தினாா் என்பது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத விசாரணையின்போது அல்-காய்தா மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புகளுடன் உஸ்மான் கானுக்குத் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பூா்விகமாகக் கொண்ட அவா், அந்தப் பகுதியில் தங்கள் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் அமைப்பது குறித்து பேசியது ரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள நாடாளுமன்றக் கட்டத்தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, லண்டன் பங்கு மாற்றகத்தைக் குண்டு வைத்து தகா்ப்பது உள்ளிட்ட சதித்திட்டங்களை தீட்டியதாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றங்களையும், பயங்கரவாத ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி திரட்டியது ஆகிய குற்றங்களையும் நீதிமன்றத்தில் உஸ்மான் கான் ஒப்புக் கொண்டாா். அதனைத் தொடா்ந்து அவருக்கு காலவரையற்ற சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டில் அந்த தண்டனையை 16 ஆண்டுகளாக நிா்ணயம் செய்தது. மேலும், உஸ்மான் கானுக்கு ஜாமீன் வழங்ககவும் அந்த நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

லண்டன் பாலத்தில் உஸ்மான் கான் வெள்ளிக்கிழமை நடத்திய சரமாரி கத்திக் குத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய உஸ்மான் கானை போலீஸாா் சுட்டுக் கொன்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com