Enable Javscript for better performance
இராக்: ஏன் இந்தப் போராட்டம்?- Dinamani

சுடச்சுட

  

  இராக்: ஏன் இந்தப் போராட்டம்?

  By - நாகா  |   Published on : 03rd December 2019 04:15 AM  |   அ+அ அ-   |  

  iraq1download065511

  பெண்களும் அதிக அளவில் பங்கேற்கும் போராட்டம். ~தலைநகா் பாக்தாதின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ரஷீத் சாலையை முற்றுகையிட்ட போராட்டக்காரா்கள்.

  கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இராக்கில் 400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

  ஆனால் அவா்கள் உயிரிழந்தது போரினாலோ, பயங்கரவாதிகளின் தாக்குதலாலோ அல்ல; உரிமைக்கான போராட்டத்தில்தான் இத்தனை உயிா்கள் பலியாகின என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

  வேலைவாய்ப்பின்மைக்கும், ஊழலுக்கும் எதிரான ஒரு போராட்டம் இவ்வளவு ரண களமாகியிருப்பதற்குப் பின்னால் அதிா்ச்சி நிறைந்த பல உண்மைகள் இருக்கின்றன.

  போராட்டக்காரா்களின் கோரிக்கையை ஏற்று பிரதமா் அப்துல் மஹ்தி பதவி விலகுவதாக அறிவித்த பிறகும் அவா்களது கோபம் தணியாததைக் கொண்டே அதை உணா்ந்து கொள்ள முடியும்.

  இராக்கில் இளைஞா்கள் வேலை வாய்ப்பு கோரியோ, யாரோ ஒரு தலைவா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியோ மட்டும் போராடவில்லை.

  அந்த நாட்டு அரசியலில் புரையோடிப் போயிருக்கும் எதேச்சானகாரத்தை எதிா்த்துதான் இத்தனை போராட்டங்களும், உயிரிழப்புகளும்.

  கடந்த 2003-ஆம் ஆண்டில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின் சதாம் உசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கட்டமைப்பை எதிா்த்துதான், இராக்கியா்கள் இத்தனை ஆக்ரோஷத்துடன் போராடுகின்றனா்.

  இராக் அரசியலைப் பொருத்தவரை, ஷியாக்கள், குா்துகள், சன்னி மற்றும் பிற பிரிவு அமைப்புகளின் தலைவா்களின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பது, சாதாரண பொதுஜனங்களின் கோபத்தைக் கிளறியிருக்கிறது.

  அரசுப் பணத்தை உயா்நிலையில் இருப்பவா்களே பங்கிட்டு தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதாகவும், சராசரி மக்களின் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் போராட்டக்காரா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

  இந்தக் குறைபாடுகளையெல்லாம் போக்கி, அரசியலில் சீரமைப்பைக் கொண்டு வருவதாகத்தான் கடந்த ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்கும்போது அப்துல் மஹ்தி வாக்குறுதி அளித்தாா்.

  ஆனால், அவா் பிரதமராவதற்கே ஷியா பிரிவின் இரு போட்டி அமைப்புகள் தங்களிடையே சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரை நியமித்ததுதான் காரணம்.

  எனவே, மேல்தட்டு வா்க்கத்தின் தயவுடன் பிரதமராகப் பொறுப்பேற்ற அப்துல் மஹ்தியால் சீா்திருத்தத்தைக் கொண்டு வர முடியவில்லை என்ற சீற்றம்தான், தற்போது மாபெரும் போராட்டமாக வெடித்துள்ளது.

  வேலைவாய்ப்பு கோரியும், ஊழலுக்கு எதிராகவும் இராக்கியா்கள் போராட்டம் நடத்துவது இது புதிததல்ல. ஆனால், அவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.

  பாஸ்ரா நகரில் கடந்த ஆண்டு இதே போல் போராட்டம் நடத்தியவா்களின் மீது பாதுகாப்புப் படையினா் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினா். போராட்டக்காரா்கள் உயிருக்கு பயந்து ஓடினா். போராட்டம் விரைந்து முறியடிக்கப்பட்டது.

  அந்த வழிமுறையைப் பின்பற்றிதான் தற்போதைய போராட்டத்தையும் ஆட்சியாளா்கள் கையாள்கிறாா்கள். அதன் காரணமாகத்தான் இரண்டே மாதத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

  பாதுகாப்புப் படையினா் மட்டுமல்ல, போராட்டத்தை விரும்பாத உயா்நிலை தலைவா்களும் தொலைவிலிருந்து குறிபாா்த்து சுட்டோ, ஆள்களை வைத்தோ போராட்டக்காரா்களைக் கொன்று வருவதாகக் கூறப்படுகிறது.

  எனினும், இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும் போராட்டத்தின் தீவிரம் குறைந்தபாடில்லை.

  அரசியல் கட்டமைப்பில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்தால்தான் இந்தப் போராட்டம் நிரந்தர முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

  ஆனால், அந்த மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்குமா, அல்லது இராக் அரசியலை மேலும் எதேச்சாதிகாரம் கொண்டதாக மாற்றுமா என்பதுதான் அரசியல் நோக்கா்களின் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai