விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நாசா புகைப்படம் வெளியீடு

விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நாசா புகைப்படம் வெளியீடு

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னர், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர் பகுதி, விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது. 

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, ஆர்பிட்டரிலிருந்து கடந்த மாதம் 7-ஆம் தேதி பிரித்து விடப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்தது. 

அதனுடனான தொடர்பை மீட்டெடுக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய குழு ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது. 

இந்நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதில் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் மற்றும் பச்சை நிறப்புள்ளிகளாகக் காணப்படுகிறது. அவற்றில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகளாகவும், நீல நிறப் புள்ளிகள் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது. 

தற்போது அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை சரியாக கண்டறியமுடியவில்லை. வரும் அக்டோபர் மாதம் நிலவின் அப்பகுதி வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும். எனவே அப்போது அப்பகுதியில் அதிக புகைப்படங்களை எடுக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணினி நிறுவனத்தில் பொறியாளராக சண்முக சுப்பிரமணியன் பணியாற்றி வருகிறார். 

விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர். விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியத்துக்கு நாசா நன்றி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com