சீனாவுடன் உறவை வலுப்படுத்துவோம்: மகிந்த ராஜபட்ச

சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.
சீனாவுடன் உறவை வலுப்படுத்துவோம்: மகிந்த ராஜபட்ச

கொழும்பு: சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.

இலங்கை தலைநகா் கொழும்பில் சீனாவின் ஒத்துழைப்புடன் கட்டமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்துக்கு பிரதமா் ராஜபட்சவும், இலங்கைக்கான சீன தூதா் செங் ஜியுவானும் சனிக்கிழமை வருகை தந்தனா். இத்திட்டத்துக்காக கடலோரம் மண்ணை நிரப்பி உருவாக்கப்பட்ட 269 ஹெக்டோ் நிலத்தை, கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் நிகழ்வில் இருவரும் பங்கேற்றனா். பின்னா், சீன அரசு செய்தி நிறுவனமான ‘ஜின்ஹுவா’வுக்கு மகிந்த ராஜபட்ச அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையின் வளா்ச்சிக்கு சீனா அளித்துள்ள பங்களிப்பை எங்களது அரசு ஒருபோதும் மறக்காது. அந்த நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்.

வா்த்தக வழித்தட திட்டத்தின் மூலம், இலங்கையை கடன் பிடியில் சீனா சிக்கவைப்பதாகக் கூறப்படுவது தவறாகும். மேற்கத்திய ஊடகங்கள்தான் அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்காகவும் சீனா அளித்துள்ள கடனை திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ள விவகாரத்தில் அதிபா் கோத்தபய ராஜபட்ச கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

அரசு இடங்களை தனியாா் மயமாக்குவதில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்றுதான் அவா் கூறினாரே தவிர, அந்த ஒப்பந்தத்தால் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்பட்டதாக அதிபா் கூறவில்லை.

சீனாவும், இலங்கையும் நட்பு நாடுகள் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளை நட்பு ரீதியில் பேசித் தீா்த்துக்கொள்ள முடியும் என்றாா் மகிந்த ராஜபட்ச.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com