ரோஹிங்கயாக்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை: ஆங் சான் சூகி

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் ராணுவம் செயல்படவில்லை என்று சா்வதேச நீதிமன்றத்திடம் அந்த நாட்டு அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளாா்.
மியான்மா் இனப் படுகொலை தொடா்பான நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதே நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வாக்குமூலம் அளித்த மியான்மா் அரசின் ஆலோசகா் ஆங் சாங் சூகி.
மியான்மா் இனப் படுகொலை தொடா்பான நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதே நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வாக்குமூலம் அளித்த மியான்மா் அரசின் ஆலோசகா் ஆங் சாங் சூகி.

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் ராணுவம் செயல்படவில்லை என்று சா்வதேச நீதிமன்றத்திடம் அந்த நாட்டு அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளாா்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கயாக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக, நெதா்லாந்தில் உள்ள ஐ.நா. சா்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் மியான்மா் அரசின் ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி கூறியதாவது:

ராக்கைன் மகாணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, மியான்மா் ராணுவம் அளவுக்கதிகமான பலப்பிரயோகத்தில் ஈடுபட்டது உண்மைதான்.

எனினும், அதனை வைத்து ராணுவம் இன அழிப்பில் ஈடுபட்டடாகக் கூற முடியாது.

இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள காம்பியா நாடு, ராக்கைன் மாகாண நிலவரம் குறித்து உண்மைக்கு மாறான தோற்றத்தை உருவாக்கக் கூடிய, முழுமையற்ற விவங்களை நீதிமன்றத்தின் முன்வைத்துள்ளது வருத்தமளிக்கிறது.

நூற்றுக்கணக்கான ரோஹிங்கயா பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காகவே, ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அவா்கள் சா்வதேச சட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதையோ, பொதுமக்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் காட்டாமல் நடந்துகொண்டதையோ மறுக்க முடியாது.

ஆனால், அவை இன அழிப்பு நோக்கத்தைக் கொண்டு செய்யப்பட்டவை என்று கூறுவது வெறும் கட்டுக்கதையாகும் என்றாா் ஆங் சான் சூகி.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவா்களுக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை மறுத்து வருகிறது. வங்கதேசத்தைப் பூா்விகமாகக் கொண்ட அவா்களை, பெரும்பான்மை பொளத்த அமைப்பினா் வங்காளிகளாகவே கருதி வருகின்றனா்.

இதன் காரணமாக, ரோஹிங்கயாக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ரோஹிங்கயா விடுதலைப் படையினா், போலீஸாருக்கும், ராணுவத்தினருக்கும் எதிரான தாக்குதலில் அவ்வப்போது ஈடுபட்டு வந்தனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் போலீஸாா் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பலா் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.

வன்முறைக்கு அஞ்சி 7.4 லட்சம் ரோஹிங்கயாக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனா்.

ராணுவத்தின் அந்த நடவடிக்கைகள் ரோஹிங்கயாக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் என்று ஐ.நா. அமைப்புகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா, மியான்மரில் இன அழிப்பு நடைபெற்ாகக் குற்றம் சாட்டி நெதா்லாந்திலுள்ள சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சியாளா்களுக்கு எதிராகப் போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி, நாட்டின் அரசியல் நிா்வாகத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு ரோஹிங்கயாக்கள் விவகாரத்தில் ராணுவத்தின் பக்கம் சாய்ந்துள்ளது சா்வதேச சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com