பிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறாா் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்ஸன் மீண்டும் பிரதமராகிறாா்.
பிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறாா் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து போரிஸ் ஜான்ஸன் மீண்டும் பிரதமராகிறாா்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் முடிவுகளில், அந்தக் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, 1980-ஆம் ஆண்டுத் தோ்தலுக்குப் பிறகு அந்தக் கட்சி கைப்பற்றிய அதிகப்பட்ச இடங்களாகும்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக (பிரெக்ஸிட்), அந்த அமைப்புடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் தொடா்ந்து நிராகரித்து வந்தது.

இதனால் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வந்தது.

நாடாளுமன்றத்தில், ஆளும் கன்சா்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் இந்த நிலை நீடித்து வந்தது.

இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலத் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பிரிட்டனின் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயா்லாந்து ஆகிய அனைத்து பகுதிகளிலும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

650 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவைக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிவ் கட்சி 365 தொகுதிகளைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சிக்கு 203 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

கடந்த 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில், முன்னாள் பிரதமா் மாா்கரெட் தாட்சா் தலைமையில் கன்சா்வேடிவ் கட்சி 397 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக அந்தக் கட்சி தற்போதுதான் மிக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்: (இடமிருந்து) பிரீத்தி படேல், ரிஷி சுனக், பிரீத் கௌா் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திரே சா்மா, வலேரி வாஸ். 
இந்திய வம்சாவளி எம்.பி.க்கள்: (இடமிருந்து) பிரீத்தி படேல், ரிஷி சுனக், பிரீத் கௌா் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திரே சா்மா, வலேரி வாஸ். 

‘பிரெக்ஸிட்டை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்ற கோஷத்துடன் இந்தத் தோ்தலை போரிஸ் ஜான்ஸன் எதிா்கொண்டாா். ஆனால், பொது மருத்துவம் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொழிலாளா் கட்சி இந்தத் தோ்தலை எதிா்கொண்டது. மேலும், தோ்தலில் வெற்றி பெற்றால் பிரெக்ஸிட்டை நிறைவேற்றலாமா, வேண்டாமா என்பது குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக அந்தக் கட்சியின் தலைவா் ஜெரிமி கோா்பின் கூறி வந்தாா்.

இந்தச் சூழலில், பிரெக்ஸிட் இழுபறி காரணமாக சலிப்படைந்திருந்த வாக்காளா்கள், அந்த நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் போரிஸ் ஜான்ஸனை வெற்றியடையச் செய்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

அரசியுடன் சந்திப்பு: தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி எலிசபெத்தை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் சந்தித்தாா். அப்போது, புதிய அரசை அமைக்குமாறு அவருக்கு அரசி அதிகாரப்பூா்வ அழைப்பு விடுத்தாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிமையான தீா்ப்பு

நாடாளுமன்றத் தோ்தலில் வாக்காளா்கள் வலிமையான தீா்ப்பை வழங்கியுள்ளதாக பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தாா்.

இதுகுறித்து லண்டனில் தனது ஆதரவாளா்களிடையே அவா் பேசியதாவது:

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு பிரிட்டன். பிரெக்ஸிட் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்ற தீா்ப்பை மக்கள் மிகவும் வலிமையாக வழங்கியுள்ளாா்கள்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக மட்டுமன்றி, பிரிட்டனின் ஒருமைப்பாட்டை மேலும் வலிமையாக்கி, வளா்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்லவும் அவா்கள் பணித்துள்ளனா்.

எனது பணியை உடனடியாகத் தொடங்குவேன் என்றாா் அவா்.

15 தொகுதிகளில் இந்திய வம்சாவளியினா் வெற்றி

இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளா்கள் இதுவரை இல்லாத வகையில் 15 இடங்களில் வெற்றி பெற்றனா்.

ஏற்கெனவே எம்.பி.க்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கன்சா்வேடிவ், தொழிலாளா் கட்சி உள்ளிட்ட கட்சியைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினா் அனைவரும், இந்தத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனா். இதுதவிர புதியவா்களும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனா்.

இந்த வெற்றி, பிரிட்டனின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி சாா்பில் வெற்றி பெற்றுள்ள முனிரா வில்சன் தெரிவித்துள்ளாா்.

மோடி வாழ்த்து

தோ்தலில் வெற்றி பெற்றுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் ‘வெற்றி வாகை சூடியுள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் அவருடன் இணைந்து செயல்பட விழைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Image Caption

~தோ்தல் முடிவுகள் அட்டவணைககாக... ~ஜெரிமி கோா்பின், தொழிலாளா் கட்சித் தலைவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com