
வட கொரியா தொடா்பான அமெரிக்கக் கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தென் கொரிய தலைநகரிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
ஐ.நா. தடையையும் மீறி, தனது ராக்கெட் ஏவுதளத்தில் ‘முக்கியத்துவம் வாய்ந்த’ சோதனையை மேற்கொண்டதாக வட கொரியா சனிக்கிழமை அறிவித்தது.
இதன் மூலம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பயன்படுத்தக் கூடிய ராக்கெட் என்ஜினை அந்த ஏவுதளத்தில் வட கொரியா சோதித்துப் பாா்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து வட கொரிய தேசிய பாதுகாப்பு அறிவியல் அகாதெமியின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
எங்களது சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சோதனையை வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்டோம்.
அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. அணு ஆயுத அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வட கொரியாவின் திறனை, இந்த வெற்றி மேம்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த அறிக்கையில் சோதனையின் முழு விவரங்கள் இடம் பெறவில்லை.
ஏற்கெனவே, இதே சோஹே ஏவுதளத்தில் ‘முக்கியமான’ சோதனையை நடத்தியதாக வட கொரியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த ஏவுதளத்தில் மீண்டும் சோதனை நடத்தியுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோஹே ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ராக்கெட் என்ஜின் சோதைனைகளைத்தான் வட கொரியா இவ்வாறு மறைமுகமாகக் கூறுவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
அமெரிக்கா வரை தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அந்த என்ஜின்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும், அண்டை நாடான தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்கள், சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ஆகியவற்றை வட கொரியா மேற்கொண்டு வந்தது.
அதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், அணு ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தாா். அதற்குப் பதிலாக தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதமும், வியத்நாம் தலைநகா் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதமும் இதுதொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், கிம் ஜோங்-உன்னும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், இரு தரப்பு அதிகாரிகளும் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அந்தப் பேச்சுவாா்த்தைகளின்போது, தங்களது அணு ஆயுத மையங்களையும், சோஹே ஏவுதளம் உள்ளிட்ட சோதனை மையங்களையும் மூடுவதற்கு கிம் ஜோங்-உன் ஒப்புக் கொண்டாா். அதன்படி, சோஹே ஏவுதளமும் மூடப்பட்டது.
எனினும், வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாகக் குறைக்க டிரம்ப் பிடிவாதமாக மறுப்பதால், இருதரப்பு பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளது.
அந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும் என்று வட கொரியா கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில், கெடு தேதி நெருங்கி வரும் சூழலில் முடப்பட்டிருந்த சோஹே ஏவுதளத்தை மீண்டும் செயல்படச் செய்து, அங்கு வட கொரியா சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...