சிரியா, ஆப்கனிலிருந்து படையினர் வாபஸ் விவகாரம்: டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக அமெரிக்க செனட்டில் தீர்மானம்

சிரியா, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்ப அழைக்கும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு எதிரான தீர்மானம்,


சிரியா, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்ப அழைக்கும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு எதிரான தீர்மானம், அந்த நாட்டு செனட் சபையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி. மிட்ச் மெக்கனல் கொண்டு வந்து, அதற்கு அறுதிப் பெரும்பான்மை வாக்குகளும் கிடைத்திருப்பது, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப்பின் கொள்கைகளை குடியரசுக் கட்சியினரே ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்த டிரம்ப்பின் கொள்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் மிட்ச் மெக்கனல் திங்கள்கிழமை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் வீரர்களைத் திரும்ப அழைக்கும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வீரர்களைத் திரும்ப அழைத்தால், அது அந்த நாடுகளில் அமெரிக்கா மிகக் கடுமையாகப் போராடி பெற்ற வெற்றிகளை வீணடிப்பதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே, வீரர்களைத் திரும்ப அழைக்கும் டிரம்ப்பின் உத்தரவில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 26 வாக்குகளும் பதிவாகின. செனட் சபையில் உள்ள 53 ஆளும் கட்சி உறுப்பினர்களில், 3 பேர் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் காரணமாக அங்கு பணியாற்றி வரும் 2,000 வீரர்களைத் திரும்ப அழைக்கப் போவதாகவும் அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி, ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதலே அமெரிக்கப் படையினர் செயல்பட்டு வருவதால் ஏராளமான உயிரிழப்புகளும், பொருளிழப்பும் ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, அந்த நாட்டிலுள்ள 14,000 அமெரிக்க வீரர்களில் பாதி பேரை திரும்ப அழைக்கப்போவதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், சிரியா, ஆப்கானிஸ்தானிலிருந்து படையினரை திரும்பப் பெறும் டிரம்ப்பின் முடிவுக்கு எதிரான தீர்மானத்தை செனட் சபையில் அவரது கட்சியினரே கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com