சுடச்சுட

  

  பிட்காய்ன் சேவை மையத் தலைவர் இந்தியாவில் திடீர் மரணம்: 14.5 கோடி டாலர் மாயம்?

  By DIN  |   Published on : 07th February 2019 12:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pit-coin


  பிட்காய்ன் உள்பட பல்வேறு நிதிப் பரிமாற்ற சேவை வழங்கும் மையத்தின் தலைவர் இந்தியாவில் திடீரென மரணமடைந்து விட்டதால், அவரிடம் முதலீடு செய்திருந்த பலர், பணத்தை திரும்பப் பெற முடியால் தவித்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் மூலம் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 14.5 கோடி டாலர் பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
  கனடாவில் உள்ள வான்கூவர் நகரைச் சேர்ந்த இளைஞர் ஜெரால்டு காட்டன்(30). இவர், டிஜிட்டல் கரன்சி அல்லது மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் பிட்காய்ன் உள்பட பல்வேறு நிதி பரிமாற்ற சேவைகள் வழங்கும் மையத்தினை நடத்தி வந்தார். அவரது மையத்தில், சுமார் 3,63,000 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள், ஜெரால்டு காட்டன் நடத்தி வந்த மையத்தின் மூலமாக, 14.5 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்திருந்தனர்.
  இதனிடையே, கடந்த டிசம்பரில் இந்தியாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்திருந்த ஜெரால்டு காட்டன் திடீரென்று மரணமடைந்தார். அவர், ஏற்கெனவே குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
  அவரது மரணத்தால், அவரது நிதி பரிமாற்ற சேவை மையம் முடங்கியுள்ளது. ஏனெனில், டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை ஜெரால்டு காட்டன் தனது மடிக்கணினியில் பராமரித்து வந்தார். அந்த மடிக்கணினியின் கடவு வார்த்தை யாருக்கும் தெரியவில்லை. அந்த வார்த்தையை அவர் யாருக்கும் சொல்லவுமில்லை. இந்நிலையில், அவரது நிறுவனத்தில் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்திருந்த தொகை என்ன ஆனது என்று தெரியவில்லை.
  இதுகுறித்து ஜெரால்டு காட்டனின் மனைவி ஜெனிஃபர் ராபர்ட்சன் கூறியதாவது:.டிஜிட்டல் கரன்சியை மீட்பது உள்பட இந்த மையத்தின் பணப் புழக்கம் வரையிலான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு கடந்த சில வாரங்களாக முயன்று வருகிறோம்; துரதிருஷ்டவசமாக, எங்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பித் தர முடியவில்லை. ஜெரால்டு காட்டனின் மடிக்கணினியில் ஊடுருவி, அவற்றில் சேகரிக்கப்பட்டுள்ள விவரங்களைப் பெறும் முயற்சியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
  இந்நிலையில், அந்த மையம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதில் இருந்து நோவா ஸ்கோட்டிகா உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
  டிஜிட்டல் கரன்சி பரிமாற்ற சேவைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அத்துடன், டிஜிட்டல் கரன்சி மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றம், சட்டவிரோதமாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்சிக்கு பெரும்பாலான உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், இணையதளம் வாயிலாக, சிலர் டிஜிட்டல் கரன்சியை முதலீடு செய்கிறார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai