பழி வாங்கும் அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்: நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் டிரம்ப் வலியுறுத்தல்

பழி வாங்கும் அரசியலைக் கைவிட்டு, அமெரிக்க முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.


பழி வாங்கும் அரசியலைக் கைவிட்டு, அமெரிக்க முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் எழுப்பும் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும், ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் டிரம்ப் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிபராகப் பொறுப்பு வகிப்பவர், ஒவ்வோர் ஆண்டிலும் அந்த ஆண்டுக்கான தனது செயல்திட்டங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் விவரிப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை உரையாற்றினார்.
82 நிமிடங்களுக்கு நீடித்த அந்த உரையில் டிரம்ப் கூறியதாவது:
மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு இந்த நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் கடந்த காலத்தில் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால், அதுபோன்ற ஒரு சுவர் இதுவரை எழுப்பப்படவே இல்லை. எனினும், அந்தச் சுவரை நான் எழுப்பியே தீருவேன்.
மிகவும் அருமையான, ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் இன்னொரு பக்கம் தெரியக் கூடிய, உறுதியான இரும்புத் தடுப்புகள் மூலம் அந்தச் சுவர் எழுப்பப்படும்.
பழி வாங்கும் அரசியல்: பழி வாங்கும் அரசியலை நாம் கைவிட வேண்டும்;  எதிர்ப்பு அரசியலுக்குப் பதிலாக ஒத்துழைப்பு, விட்டுக் கொடுத்தல், பொதுவான நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 
அரசியல் வேறுபாடுகளின்றி நாம் ஒற்றுமையாகச் செயல்பட்டால், பல ஆண்டுகளாக நம்மிடையே நீடித்து வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரலாம். நமது பழைய வேறுபாடுகளை மறக்கலாம்; பழைய ரணங்களை ஆற்றிக் கொள்ளலாம்; புதிய கூட்டணிகளையும், புதிய தீர்வுகளையும் உருவாக்கலாம்; இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் எதிர்காலத்தை கட்டமைக்கலாம்.
கேலிக்குரிய விசாரணை: நாம் ஒன்றிணைந்து, அமெரிக்காவின் பொது எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பொருளாதாரம் அதிசயிக்கத்தக்க வகையில் முன்னேற்றமடையவிருக்கிறது. இந்த நிலையில் நம் நமக்குள் சண்டையிட்டுக் கொண்டு, கேலிக்குரிய விசாரணைகளை (2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ரஷியாவுடன் இணைந்து டிரம்ப் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படுவது குறித்து நடைபெறும் விசாரணை) நடத்திக் கொண்டு இருந்தால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியாது.
ஆப்கன், இராக் போர்கள்: எந்த ஒரு மிகச் சிறந்த நாடும் முடிவில்லா போரை நடத்திக் கொண்டிருக்காது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை வெற்றிகரமாக தோற்கடித்துவிட்டோம். ஆப்கானிஸ்தானிலும் தலிபான் பயங்கரவாதிகளுடன் அரசியல் தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
வர்த்தகப் பதற்றம்: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும், செல்வங்களையும் சீனா திருடுவதைத் தடுப்பதற்காகத்தான் அந்த நாட்டுப் பொருள்கள் மீது நான் கூடுதல் வரிகளை விதித்து வருகிறேன்.
உலக நாடுகளுடன் அமெரிக்கா சரிசமமான அளவில் வர்த்தகம் மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான புதிய சட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்.
வெனிசூலா: வெனிசூலாவில் நிக்கோலஸ் மடூரோவின் தலைமையை ஏற்பதில்லை என்பதிலும், இடைக்கால அதிபராக அறிவித்துள்ள ஜுவான் குவாய்டோவை அங்கீகரிப்பது என்பதிலும் அமெரிக்க நிலைப்பாடு தொடரும் என்று தனது உரையில் டிரம்ப் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com