பிரபல பத்திரிகையாளர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

40 ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிகை உலக அனுபவம் கொண்ட ரிச்சர்டோ போசட் பிரேசிலின் அனைத்து முன்னணி மற்றும் பிரபல பத்திரிகைகளிலும், ரேடியோ ஷோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர்
பிரபல பத்திரிகையாளர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

பிரேசில்: பிரேசிலிய பத்திரிகையாளரான ரிச்சர்டோ போசாட் திங்கள்கிழமை சாவோ பாவ்லோவில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

அருகிலுள்ள நகரமான காம்பினாஸில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு போசாட் ஹெலிகாப்டரில் திரும்பி வந்து கொண்டிருக்கையில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது, திரும்பும் வழியில் நெரிசலான சாலை ஒன்றில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயலும் போது வேகமாக வந்து கொண்டிருந்த டிரக்கில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டருக்குள் அதன் பைலட் மற்றும் பத்திரிகையாளர் போகட் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரக் டிரைவருக்கு பெரிதாக காயங்கள் இல்லை. மேலும் அந்தப் பகுதியில் அப்போது நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கும் இந்த விபத்தால் எவ்விதக் காயங்களும் இல்லை.

66 வயதான ரிச்சர்டோ போசட் 'டி வி ஸ்டேஷன் பேண்ட்' எனும் பிரேசிலிய தொலைக்காட்சியில் இரவுச் செய்திகளை தொகுத்து வழங்கும் செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அத்துடன் அவர் அத்தொலைக்காட்சி ஒளிபரப்பிய காலை நேர ரேடியோ ஷோவிலும் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிகை உலக அனுபவம் கொண்ட ரிச்சர்டோ போசட் பிரேசிலின் அனைத்து முன்னணி மற்றும் பிரபல பத்திரிகைகளிலும், ரேடியோ ஷோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் மிகச்சிறந்த அரசியல் விமர்சகராகவும் ரிச்சர்டோ போசட் செயல்பட்டு வந்தார். இவ்விஷயத்தில் ரிச்சர்டோ மீது பிரேசிலிய மக்களுக்கு மிகுந்த மரியாதை இருந்து வந்தது. ரிச்சர்டோவின் இழப்புக்கு பிரேசிலின் முக்கியமான அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அத்துடன் பிரேசில் குடியரசுத் தலைவர் ஜார் போல்ஸ்னரோ  அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்... அரசியல் ரீதியாகக் கொள்கை அளவில் மாற்றுக் கருத்து கொண்டவர்களாக இருந்த போதும் தமக்கு ரிச்சர்டோவின் பத்திரிகைப் பணி மீது மிகுந்த மரியாதை உண்டு என்றும் தொடர்ந்து தனது 40 ஆண்டுகாலப் பத்திரிகையாளர் பணியில் ரிச்சர்டோ அத்தனை தகவல்களையும் தமது விரல்நுனியில் வைத்துக் கொண்டு மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றிய மாண்பை பிரேசிலிய அரசும் மக்களும் மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com