அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க எம்.பி.க்கள் ஒப்பந்தம்

அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக்
டெக்ஸாஸ் மாகாணத்தில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன், அந்த மாகாணத்தின் ஜாக்ஸன் மாவட்ட ஷெரீஃப் ஏ.ஜே. லவுடர்பேக் (வலமிருந்து 2-ஆவது).
டெக்ஸாஸ் மாகாணத்தில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன், அந்த மாகாணத்தின் ஜாக்ஸன் மாவட்ட ஷெரீஃப் ஏ.ஜே. லவுடர்பேக் (வலமிருந்து 2-ஆவது).


அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ரிச்சர்ட் ஷெல்பி கூறியதாவது:
அரசுத் துறைகள் முடக்கம் தொடர்பாக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் திங்கள்கிழமை மாலை நடத்திய பேச்சுவார்த்தை மிக நல்லபடியாக அமைந்திருந்தது.
எல்லைகளைப் பாதுகாப்பதற்கான உள்நாட்டுப் பாதுகாப்பு மசோதா உள்பட 7 மசோதாக்களை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்ற இருதரப்பினரும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க அரசுத் துறைகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பட்ஜெட், வரும் வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
இந்த நிலையில், அந்தத் துறைகள் தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு கோரும் மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்த பேச்சுவார்த்தையில் குடியரசுக் கட்சினரும், ஜனநாயகக் கட்சியினரும் ஈடுபட்டனர்.
அந்தப் பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்பும் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், எல்லையில் தடுப்பு வேலி எழுப்புவதற்கு 137.5 கோடி டாலர் (சுமார் ரூ.9,700 கோடி) நிதி ஒதுக்கீடு செய்ய ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக் கொண்டனர். எல்லைச் சுவருக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரி வரும் 570 கோடி டாலரை விட (சுமார் ரூ.40,300 கோடி) இது மிகவும் குறைவாகும்.
மேலும், டிரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்க்ரீட் ஆன சுவர்களை எழுப்ப அந்த ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ரியோ கிராண்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் மெக்ஸிகோவை ஒட்டிய எல்லைப் பகுதியில் பாதுகாக்கப்படாத 88 கி.மீ. தொலைவுக்கு புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதையடுத்து, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், டெக்ஸாஸ் மாகாணம் எல் பாúஸா மாகாணத்தில் ஆதரவாளர்களிடையே பேசிய டிரம்ப், மெக்ஸிகோ எல்லைச் சுவர் மற்றும் அரசுத் துறைகள் முடக்க விவகாரம் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என சூசமாகத் தெரிவித்தார்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இதன் காரணமாக பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படாததால், பல்வேறு முக்கிய அரசுத் துறைகளும் கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டன.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த இந்த அரசுத் துறைகள் முடக்கத்தின் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமலேயே, வரும் இந்த மாதம் 15-ஆம் தேதி வரை அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஏற்க அதிபர் டிரம்ப் சம்மதித்தார்.
அதனைத் தொடர்ந்து, முடக்கப்பட்டிருந்த அரசுத் துறைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கின.
எனினும், எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. அதனால், இந்த மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
இந்த நிலையில், எல்லைச் சுவர் விவகாரத்தில் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com