டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: வெறுப்பு பேச்சு காரணமா? 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற  பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: வெறுப்பு பேச்சு காரணமா? 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற  பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எப்போதுமே ஊடகங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவராகவே இருந்து வருகிறார். அதை பல தருணங்களில் வெளிக்காட்டியும் இருக்கிறார்.    அவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திலும் அவர் வழக்கம் போலவே ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையிலிருந்த ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர், அந்நிகழ்விற்கு செய்தி சேகரிக்கச் செண்டிருந்த பிபிசி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ரோன் ஸ்கேன்ஸை நோக்கி சத்தம் போட்ட படி வந்து, அவரைத் தாக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இத்தாக்குதலில் ரோன் ஸ்கேன்ஸுக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் பொதுக்கூட்டத்தில் திடீர் சலசலப்பு உண்டானது. இதன் காரணமாக தனது பேச்சை நிறுத்திய டிரம்ப், குழுமியிருந்த ஊடகத்தினரை நோக்கி, ஒன்றும் பிரச்சினை இல்லையே? எல்லாம் சரியாகத்தானே உள்ளது? என கேள்வி எழுப்பிவிட்டு பின் தனது பேச்சினைத் தொடந்தார்.

அப்போதும் அவர் ஊடகங்களை விமர்சித்தே பேசினார். ஊடகங்கள் முற்றிலும் நேர்மையற்றவை எனவும் டிரம்ப் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

இந்நிலையில் பிபிசி நிறுவனத்திற்கான அமெரிக்க எடிட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸூக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் அவர், "செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினர் பகுதிக்கு செல்லும் வழியானது கண்காணிப்பின்றி உள்ளது. தாக்குதல் நடந்த பிறகோ, அதற்கு முன்பாகவோ, எந்த ஒரு சட்ட அதிகாரிகளும் அங்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டமைப்பும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com