சுடச்சுட

  

  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: மாலத்தீவு முன்னாள் அதிபர் மீது வழக்கு பதிவு

  By DIN  |   Published on : 14th February 2019 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yameen


  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
  கடந்த 2013-18 ஆம் ஆண்டுகளில் மாலத்தீவின் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் அவருக்கு எதிராக இருந்தவர்களை அவர் நாடு கடத்தியதாகவும், சிறையில் அடைத்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாமீன் தோல்வியுற்றார். மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராஹிம் முகமது சோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  இந்நிலையில், யாமீன் அதிபராக இருந்தபோது, மாலத்தீவின் உள்ள சிறிய தீவை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்ட விவகாரத்தில், மோசடி செய்ததாக புதிய குற்றச்சாட்டு எழுந்தது. 
  இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
  தங்கும் விடுதி அமைப்பதற்காக, மாலத்தீவில் உள்ள தீவு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான குத்தகைப் பணம் நாட்டின் கருவூலக் கணக்கில் செலுத்தப்படவில்லை. அதேசமயத்தில், அந்த தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து யாமீன் வங்கிக் கணக்குக்கு ரூ. 7. 07 கோடி மாற்றப்பட்டுள்ளது. அதையடுத்து  சந்தேகத்தின் அடிப்படையில், அது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் யாமீனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யாமீனுக்கு ஆதரவாகவும் சிலர் வாக்குமூலம் அளித்தனர்.
  எனினும், தனியார் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 7. 07 கோடி மாற்றப்பட்டுள்ளதற்கான காரணத்தை யாமீன் தெளிவாகக் கூறவில்லை. அதனால் மாலத்தீவு நாட்டின் கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை யாமீன் அபகரித்து விட்டதாக கூறி, அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 
  விசாரணையின்போது, பொய்யான சாட்சியங்களை உருவாக்கியதற்காகவும் அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai