அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுக்கு அத்தியாவசியம்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுக்கு அத்தியாவசியம்


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டே ஆக வேண்டிய நிலையில் தற்போது சீனா உள்ளது.
எனவே, விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும். ஆனால், அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்ததைப் போல வெளித் தோற்றத்தில் மட்டும் அமெரிக்காவுக்கு நன்மையளிக்கும் ஒப்பந்தமாக இருக்காது.
சீனாவுடன் மிகச் சரியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்போதுதான் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் டிரம்ப்.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அந்த நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவைப் அவர் பிறப்பித்து வந்தார்.
இதற்குப்  பதிலடியாக,  அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகளை அறிவித்து வந்தது.
இது, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டினிடையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
அதையடுத்து, அந்த தாற்காலிக  ஒப்பந்தத்தை நிரந்தரமாக்கும் வகையில், இரு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
இந்தச் சூழலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com