சர்ச்சைக்குரிய கருத்து: ஜப்பான் மன்னரிடம் மன்னிப்பு கேட்கதென் கொரிய எம்.பி. மறுப்பு

இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பான் ராணுவம் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த விவகாரத்தில் ஜப்பான்


இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பான் ராணுவம் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த விவகாரத்தில் ஜப்பான் அரசருக்கு எதிராகத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தென் கொரிய எம்.பி.யும், நாடாளுமன்றத் தலைவருமான மூன் ஹீ-சாங் தெரிவித்துள்ளார்.
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த ஜப்பான், கொரியப் பெண்களை தங்கள் நாட்டு ராணுவத்தினருக்கான பாலியல் அடிமைகளாக்கி வைத்திருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகத் திகழ்ந்தாலும், பாலியல் அடிமைகள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஜப்பான் முழுமனதுடன் மன்னிப்பு கேட்கவில்லை என்று தென் கொரியாவும், இதுதொடர்பாக ஏற்கனவே போதுமான அளவு மன்னிப்பு கேட்டுவிட்டதாக ஜப்பானும் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு கடந்த வாரம் பேட்டியளித்த தென் கொரிய நாடாளுமன்றத் தலைவர் மூன் ஹீ-சாங், பாலியல் அடிமைகள் விவகாரத்தில் ஜப்பான் முழு மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஜப்பான் மன்னர் அகிடோ, தனது பதவியைத் துறப்பதற்கு முன்னரே முன்னாள் பாலியல் அடிமைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளியின் மகன் என்ற முறையில் அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மூன் ஹீ-சாங்கின் இந்தக் கருத்து ஜப்பானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்னர் குறித்து அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஜப்பான் அரசர் குறித்து தாம் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரும் எண்ணமில்லை என்று மூன் ஹீ-சாங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com