தேர்தலில் போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல்ரத்தனா (67)  மன்னிப்பு கேட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி


தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல்ரத்தனா (67)  மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில்,  தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றேன். ஆனால் அது பிரச்னையை உருவாக்கும் என்று நான் எண்ணவில்லை. அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியை ராணுவப் புரட்சியின் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு கவிழ்த்த அப்போதைய ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா, தற்போது அந்த நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஃபலங் பிராசரத் கட்சி சார்பிலான பிரதமர் பதவி வேட்பாளராக அவர் போட்டியிடவிருக்கிறார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
இதனிடையே, அந்த நாட்டில் செல்வாக்கு மிக்க ஷினவத்ரா கும்பத்தினரின் தலைமையில் செயல்படும் தாய் ரக்சா சார்ட் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக  இளவரசி உபோல்ரத்தனா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசர் மஹா வஜிரலங்கார்ன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை தேர்தலில் நிறுத்தும்  திட்டத்தை தாய் ரக்சா சார்ட் கட்சி கைவிட்டது. அதையடுத்து பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல் ரத்தனாவின் பெயரை தகுதிநீக்கம் செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதையடுத்து கடந்த ஒரு வாரமாக  தேர்தலில் இளவரசி போட்டியிடுகிறார் என்று அந்நாட்டில் நிலவிய அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com