அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசூலா அதிபர் ஒப்புதல்

வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அமெரிக்க அரசுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசூலா அதிபர் ஒப்புதல்


வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அமெரிக்க அரசுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:
வெனிசூலாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்ட பிறகு,  வெனிசூலா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸா இரண்டு முறை அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
நியூயார்க்கில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது, வெனிசூலாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் எலியட் அப்ராம்ஸை வெனிசூலா வரும்படி அரீஸா அழைத்தார்.
நியூயார்க் நகரில் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் பல மணி நேரத்துக்கு நீடித்தன என்றார் மடூரோ.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், வெனிசூலாவில் ஆட்சியிலிருந்து மடூரோ வெளியேறுவது தொடர்பாக, அவர் உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
வெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் படைத்த அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்து ஆட்சி செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில், மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்  ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை கடந்த மாதம் அறிவித்துக் கொண்டார். அவர் அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது. பிரேஸில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை அங்கீகரித்தன.
எனினும், ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் அதிபர் மடூரோவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிக்கோலஸ் மடூரோ தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com