வட கொரிய அதிபருடனான இரண்டாவது சந்திப்பு வெற்றியடையும்

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக அமையும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபருடனான இரண்டாவது சந்திப்பு வெற்றியடையும்

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக அமையும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்றும் நோக்கிலும், வட கொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்கும் நோக்கிலும், கிம் ஜோங்-உன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வியத்நாமின் ஹனோய் நகரில் பிப். 27, 28 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
 இந்தச் சந்திப்பு குறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 முதல் சந்திப்பைப் போலவே இந்தச் சந்திப்பும் வெற்றிகரமானதாகவும், சிறப்பானதாகவும் அமையும் என்று நம்புகிறேன். முந்தைய பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பல்வேறு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஏவுகணை சோதனையையும், அணு ஆயுதங்கள் சோதனையையும் வட கொரியா மேற்கொள்ளவில்லை.
 கொரியப் போரின்போது அமெரிக்கா சார்பில் போரிட்டவர்கள் வட கொரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பிணைக்கைதிகளையும் அந்நாடு விடுவித்துள்ளது. எனவே, இந்த இரண்டாவது சந்திப்பும் பயன்மிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்றுவதே எங்களது நோக்கம்.
 அதிபர் கிம் உடன் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவுடன் அவர் நட்பு பாராட்டியதில்லை. அமெரிக்காவை சுயநலத்துக்காக மட்டும் வட கொரியா பயன்படுத்தி வந்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்குப் பல பில்லியன் டாலர்கள் வீணாகச் செலவானது. ஆனால், இனியும் இவை நடைபெறாது.
 வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பாக அதன் அண்டை நாடுகளான ரஷியா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்டவற்றுடன் கலந்தாலோசித்து வருகிறேன். புவியியல் ரீதியாக வட கொரியா சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி சீனா, ரஷியா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இதன்மூலம், பொருளாதார ரீதியாக அந்நாடு சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும்.
 நான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் "அமெரிக்காவின் தற்போதையை முக்கியமான பிரச்னை என்ன' என்று கேட்டேன். அதற்கு அவர் "வட கொரியா' என்று பதிலளித்தார். ஒருவேளை என்னுடைய இடத்தில் பராக் ஒபாமா இருந்திருந்தால், அவர் வட கொரியா மீது போர் தொடுத்திருப்பார். ஆனால், தற்போது அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான நட்புறவு நிலவி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 டிரம்ப்-கிம் ஜோங் உன் இடையேயான முதல் சந்திப்பு சிங்கப்பூரின் சென்டோசா தீவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com