நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்து ரத்து: இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை; பாகிஸ்தான்

"நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

"நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உலக வர்த்தக அமைப்பிடம் முறையிடப்போவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது.
 அதாவது, பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த "நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' என்ற சிறப்பு அந்தஸ்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படை சுங்க வரியை 200 சதவீதமாக இந்தியா சனிக்கிழமை உயர்த்தியது. இதனால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்று பிரதமர் இம்ரான் கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாஸ் தாவூத் கூறினார்.
 இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேசுவோம்; அதைத் தொடர்ந்து, உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம்' என்றார்.
 பாகிஸ்தானுக்கு "நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு' என்ற அந்தஸ்தை இந்தியா கடந்த 1996-ஆம் ஆண்டு வழங்கியது. அதன்படி, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு, மற்ற உறுப்பு நாடு மீது வரி விதிப்பதில் தளர்வு காட்ட வேண்டும்.
 அதேவேளையில், இந்தியாவுக்கு நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் அளிக்கவில்லை. அந்த அந்தஸ்தை அளிப்பதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், உள்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த முடிவைக் கைவிட்டது. அதற்குப் பதிலாக, எளிதில் சந்தைப்படுத்தும் நாடு என்றஅந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், அந்த அந்தஸ்தும் வழங்கப்படவில்லை.
 சர்வதேச அமைப்புகளிடம் பாக். விளக்கம்: இதனிடையே, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறியதாவது:
 எல்லைப் பகுதியில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம், எவ்வித விசாரணையும் நடத்தாமல் உடனடியாக பாகிஸ்தானைக் குற்றம்சாட்டுவதையே இந்தியா வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலும், பின் விளைவுகளும் ஏற்படும்.
 இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தூதர்கள், தென் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் ஆகியோரிடம் வெளியுறவுத் துறைச் செயலர் தெஹ்மினா ஜன்ஜுவா விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் உறுப்பு நாடுகளின் தூதர்களிடம் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து, சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முறையிட்டது. இதையடுத்து, சர்வதேச நாடுகளிடம் பாகிஸ்தான் தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com