போர் மிரட்டலை சீனா கைவிடாமல் அமைதிப் பேச்சு கிடையாது: தைவான் திட்டவட்டம்

போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்று சீனத் தலைவர்கள் உறுதியளிக்காத வரையில், அந்நாட்டுடன் அமைதி உடன்படிக்கையை
போர் மிரட்டலை சீனா கைவிடாமல் அமைதிப் பேச்சு கிடையாது: தைவான் திட்டவட்டம்

போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்று சீனத் தலைவர்கள் உறுதியளிக்காத வரையில், அந்நாட்டுடன் அமைதி உடன்படிக்கையை மேற்கொள்வது சாத்தியமல்ல என்று தைவான் நாட்டின் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
சாய் இங் வென்னின் ஆட்சிக் காலத்தில் சீனாவுடனான உறவு சுமூக நிலையில் இல்லை. அதே சமயம், மக்களிடம் அவரது  செல்வாக்கு குறைந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை நடத்தும் திட்டம் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், தைவான் எதிர்க்கட்சித் தலைவர் வூ தென் யிஹ், அண்மையில் பேசியபோது தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில், தைபே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சாய் இங் வென் பேசியதாவது:
ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது எல்லைக்குட்பட்ட அங்கமாகக் கருதுவதுடன், நாட்டை மீண்டும் இணைப்பது குறித்து சிந்தித்து வருகிறது. 1949-இல் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து சீனாவும், தைவானும் தனித்தனியே ஆளப்படுவதை அவர்கள் உணரவில்லை.
தைவான் மீது படையெடுப்போம் என்ற கொள்கையையும், ஒரே நாடு; இரு ஆட்சி அமைப்பு என்ற கொள்கையை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சியையும் சீனா கைவிடாமல், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், உண்மையான அமைதியை ஏற்படுத்துவதும் சாத்தியமற்ற விஷயமாகும்.
சீன ராணுவத்தின் நோக்கங்களும், தைவான் மீதான படையெடுப்பு திட்டத்தை கைவிட மறுப்பதும், இந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியற்றுக்கான அச்சுறுத்தல் ஆகும் என்றார் அவர்.
முன்னதாக, தைவானை, சீனாவுடன் இணைப்பது தவிர்க்க இயலாத தேவை என்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் கடந்த மாதம் பேசியிருந்தார். இந்த நோக்கத்திற்காக தைவான் மீது படையெடுக்கப்படும் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com