
வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள மெட்ரோபோல் என்ற சொகுசு ஹோட்டலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து பேசினார் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்.
டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் சந்திப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கிடையிலான இரண்டாவது சந்திப்பு வியத்நாமின் ஹனோய் நகரில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (பிப். 27, 28) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக வட கொரியாவிலிருந்து சீனா வழியாக அதிபர் கிம் ஜோங்-உன் பிரத்யேக ரயில் மூலம் வியத்நாம் வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு முழு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது மெய்க்காப்பாளர்கள் புடைசூழ காரில் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார்.
இதனிடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காகத் தனது ஏர்ஃபோர்ஸ் ஒன் சிறப்பு விமானம் மூலம் ஹனோய் வந்திறங்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பின்னர், இருநாட்டு அதிபர்களும் நேற்றிரவு சந்தித்து பரஸ்பரம் கை குலுக்கிக்கொண்டனர். இருநாட்டு தலைவர்கள் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஹனோய் நகரில் மெட்ரோபோல் ஓட்டலில் இன்று 2வது நாளாக இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு இன்றஉ காலை தொடங்கியது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிம் யாங் சோல், அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தைக்கான வடகொரிய தலைமை பேச்சாளர் மற்றும் கிம் ஜோங்-உன் நெருங்கிய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய பேச்சுவார்த்தையில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியத்நாமுக்கு புறப்படும் முன்னர் தனது டுவிட்டர் பக்க பதிவில், வட கொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.