
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இருநாட்டு பிரதமர்களிடம் அபு தாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஸாயெத் அல்-நஹ்யான் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் வசம் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கிடையிலான சூழலில் சற்று பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், அபு தாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஸாயெத் அல்-நஹ்யான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த தகவலை இளவரசர் ஷேக் முகமது பின் ஸாயெத் அல்-நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பின் போது இளவரசர் ஷேக் முகமது பின், இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான நேர்மறையான உறவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவளிக்கும், இருநாடுகளும் அமைதியை உறுதிப்படுத்தவேண்டும் என்பதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) மாநாடு அபு தாபியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாக இளவரசர் ஷேக் முகமது பின் இருநாட்டு பிரதமர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.