
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை குண்டு வீசித் தகர்த்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் விமானப் படை புதன்கிழமை தாக்குதல் நடத்த முயன்றது.
எனினும், இந்திய விமானப் படை அந்த முயற்சியை முறியடித்தது. அந்த நடவடிக்கையின்போது காணாமல் போன இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். இதனிடையே பாகிஸ்தான் பிடியிலிருக்கும் இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை பத்திரமாகவும், உடனடியாகவும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் இந்தியா வலியுறுத்தியது.
இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அபிநந்தன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.