
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா துரிதப்படுத்தியது. பாகிஸ்தானுக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஊடுருவிச் சென்ற இந்திய விமானப்படையினர், பாலாகோடில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுவீசித் தகர்த்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ராணுவ நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று பாம்பேயோ வலியுறுத்தினார்.
இதுகுறித்து பாம்பேயோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ராணுவ நடவடிக்கையை தவிர்ப்பதன் மூலமாக பதற்றத்தை தணிக்க வேண்டியிருப்பதன் தேவையை உணர்த்தினேன்.
மேலும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பயங்ரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை பாகிஸ்தான் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
சுஷ்மாவுடன் பேச்சு: இதேபோன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு மைக் பாம்பேயோ பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், பிப்ரவரி 26ம் தேதி இந்தியா மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை (பாலாகோட் தாக்குதல்) தொடர்ந்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய பாதுகாப்பு நட்புறவு இருப்பதையும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதில் ஒரே மாதிரியான இலக்கு இருப்பதையும் சுட்டிக்காட்டினேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, என்ன விலை கொடுத்தேனும் பதற்றத்தை தணிக்க வேண்டும். நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். ராணுவ நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றும் இருநாட்டு அமைச்சர்களிடம் வலியுறுத்தியதாக பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எம்.பி. ஆதரவு: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான ராஜீய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்திருப்பதற்கு அமெரிக்க எம்.பி.யான ரிக் பெர்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான அவர் இதுகுறித்து கூறுகையில், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக நாங்கள் துக்கம் அனுசரிக்கிறோம்.
பாகிஸ்தான் உள்பட, பயங்கரவாதத்தை தூண்டிவிடும், வன்முறையை ஊக்கப்படுத்தும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கான திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது. வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்தையும் ரத்து செய்துள்ளது.
இத்தகைய கடினமான சூழலில் இந்தியாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.