
கடந்த 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு காரணமான பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுத்தி வருகின்றன.
புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது நிகழ்த்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு தின்ங்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்து முக்கியமான 3 முகாம்களை அழித்தது. இதில், 300க்கும் அதிகமான மபயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அஸாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும். ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடானஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், மசூத் அஸார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை பிரான்ஸ் கொண்டுவந்தால், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நோக்கில், கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்படும் 4-ஆவது தீர்மானமாக இது இருக்கும். ஏற்கெனவே, இதுபோன்ற தீர்மானத்தைக் கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா கொண்டுவந்தது. பின்னர், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சேர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கத் தீர்மானம் கொண்டுவந்தன.
கடைசியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு இதேபோன்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தன. இந்த அனைத்துத் தீர்மானங்களையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. எனவே, மசூத் அஸாருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
ரஷியா-இந்தியா-சீனா நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து, மசூத் அஸாருக்கு எதிராக பிரான்ஸ் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு சீனா ஆதரவளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு பலதரப்பினரிடையே எழுந்துள்ளது.