நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: சுற்றுலா அமைச்சர் உள்பட 7 பேர் பலி

நேபாளத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமை விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அந்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரவீந்திர அதிகாரி (39) உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தன
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து: சுற்றுலா அமைச்சர் உள்பட 7 பேர் பலி


நேபாளத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று புதன்கிழமை விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் அந்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரவீந்திர அதிகாரி (39) உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 
அந்நாட்டு சுற்றுலாத் துறை அளித்த தகவலின்படி, அமைச்சர் ரவீந்திர அதிகாரியுடன், நேபாளத்தைச் சேர்ந்த விமான உற்பத்தி தொழிலதிபர் ஆங் செரிங் செர்பா, நேபாள பிரதமரின் தனி உதவியாளர் யுவராஜ் தாஹல், சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் இருவர், அமைச்சரின் பாதுகாவலர் ஒருவர் ஆகியோரும் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர்.
அவர்களுடன், அந்த ஹெலிகாப்டரின் ஓட்டுநர் பிரபாகரும் உயிரிழந்ததாக விபத்துக்குள்ளான ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் ரவீந்திர அதிகாரி உள்ளிட்டோர், பஞ்ச்தார் மாவட்டத்தில் உள்ள பதிபாரா கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த ஹெலிகாப்டர் தாப்பிள்ஜங் மாவட்டத்தில் உள்ள சுச்சே தடா மலையில் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பதிபாரா பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து புகை மண்டலம் கிளம்பியதாகவும் அப்பகுதி மக்கள் கூறியதாக தாப்பிள்ஜங் மாவட்ட ஆட்சியர் அனுஜ் பந்தாரி கூறினார். 
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள், அமைச்சர் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களையும் மலைச் சரிவிலிருந்து மீட்டுள்ளனர். அதிகாரிகள் விரைந்த நிலையில், நேபாள பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவானது, பாலுவாதாரில் உள்ள பிரதமரின் இல்லத்தில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com