
செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை, சவூதி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கூறியதாவது:
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதகரத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை, ரியாத் நகரிலுள்ள நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது வழக்காடிய அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேதி சென்றார். ஆனால், தூதரகத்துக்குள் அவர் கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா 18 நாள்களுக்குப் பிறகு ஒப்புக் கொண்டது.