அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்கும் மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றம்

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பட்ஜெட் மசோதாவை, டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ சுவர் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலேயே
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி எம்.பி. நான்சி பெலோசிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சக எம்.பி.க்கள்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி எம்.பி. நான்சி பெலோசிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சக எம்.பி.க்கள்.

 ரத்து செய்வதாக டிரம்ப் மிரட்டுவதால் பரபரப்பு
அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பட்ஜெட் மசோதாவை, டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ சுவர் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலேயே எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றியது.
எனினும், அந்த மசோதாவை தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதால் அந்த மசோதா செயல்வடிவம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
அதிகரித்த பலம்: அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, கீழவையில் (மக்கள் பிரதிநிதிகள் சபை) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிபருடைய பதவிக் காலத்தின் மத்தியில் வருவதால் இடைக் காலத் தேர்தல் என்றழைக்கப்படும் அந்தத் தேர்தலில், 435 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையில் ஜனநாயகக் கட்சியினர் 220 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மை பலம் பெற்றனர்.
அவையில் ஏற்கெனவே இருந்ததை விட அவர்களுக்கு கூடுதலாக 24 இடங்கள் கிடைத்தன.
அதையடுத்து, கீழவையில் ஜனநாயகக் கட்சியின் பலம் அதிகரித்தது.
இந்தச் சூழலில், புதிதாகத் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கீழவையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, முக்கிய அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.
அரசுத் துறைகள் முடக்கம்: மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிடு செய்வதில் எம்.பி.க்களிடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதால், அந்த நாட்டின் முக்கிய அரசுத் துறைகள் கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.
மெக்ஸிகோவிலிருந்து அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் சுவர் எழுப்ப அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். எனவே, அந்த சுவரை எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாத பட்ஜெட்டில் கையெழுத்திடுவதற்கு அவர் பிடிவாதமாக மறுத்து வருகிறார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரோ, அவ்வாறு சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இரு தரப்பினரும் தங்களது இந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர மறுப்பதால், அரசின் பல்வேறு துறைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
அரசுத் துறை முடக்கம் காரணமாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் ஊதியமில்லாமல் பணியாற்றவோ, அல்லது 
கட்டாய விடுப்பில் செல்லவோ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட் மசோதா வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்றக் கீழவையில் புதிதாக பெரும்பான்மை பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர் அந்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றினர்.
எனினும், அந்த மசோதாவில் சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் மிரட்டல்: இதற்கிடையே, எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்ஜெட் மசோதாவை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த மசோதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு காலம், கடந்த 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, அந்தத் துறைகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான புதிய நிதி ஒதுக்கீட்டு மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காராசாரமான விவாதம் நடைபெற்றது.
அந்த மசோதாவில், மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில் சுவர் எழுப்புவதற்கு, 500 கோடி டாலர் ஒதுக்கீடு செய்ய அதிபர் டிரம்ப் கோரினார்.
இதற்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்தன.
முக்கியத் துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்கிய பிறகும், தங்கள் நிலைப்பாட்டை இரு தரப்பினரும் விட்டுத் தராததால், அந்தத் துறைகள் கடந்த சனிக்கிழமை (டிச. 22) முதல் முடக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com