Enable Javscript for better performance
ரோஹிங்கயா விடுதலைப் படையினரை ஒடுக்க மியான்மர் ராணுவம் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    ரோஹிங்கயா விடுதலைப் படையினரை ஒடுக்க மியான்மர் ராணுவம் தீவிரம்

    By DIN  |   Published on : 08th January 2019 01:04 AM  |   அ+அ அ-   |    |  


    மியான்மரில் ரோஹிங்கயா விடுதலைப் படை தீவிரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    மியான்மரின் பதற்றம் நிறைந்த ராக்கைன் மாகாணத்தில், 4 காவல் நிலையங்கள் மீது ரோஹிங்கயா விடுதலைப் படை தீவிரவாதிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தினர். இதில் 13 போலீஸார் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த அமைப்புக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராக்கைன் மாகணத்தில் ரோஹிங்கயா படையினருக்கும், போலீஸாருக்கும் இடையிலான மோதல் காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கயா சிறுபான்மை முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ரோஹிங்கயாக்களுக்கு எதிரான மியான்மர் அரசின் மோசமான செயல்பாடுகளை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் அவ்வப்போது கண்டித்தாலும் அந்நாட்டு அரசு அதனைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
    இந்நிலையில், ரோஹிங்கயா விடுதலைப் படைக்கு எதிராக மீண்டும் ஒரு தீவிர ராணுவ நடவடிக்கையை மியான்மர் அரசு தொடங்கியுள்ளது. இதனால், ராக்கைன் மாகாணம் மீண்டும் வன்முறைக் களமாக மாறும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
    பெளத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக்கணக்கான ரோஹிங்கயா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். வங்க மொழி பேசி வரும் அவர்கள், ராக்கைன் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வந்தாலும், அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். கடந்த 1982-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்கூட ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.
    இத்தகைய சூழலில், தங்களது உரிமைகளுக்காக ரோஹிங்கயா முஸ்லிம்களில் சிலர் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். மொழி மற்றும் மத உணர்வு காரணமாக, ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு வங்கதேசம் ஆதரவு அளித்து வருவதாக மியான்மர் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
    இந்தச் சூழலில், காவல் சாவடிகளில் ரோஹிங்கயா விடுதலைப் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
    பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்தாலும், அது இன அழிப்பு நடவடிக்கை என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.
    மியான்மர் மக்கள் அரசின் தலைவர் ஆங் சான் சூச்சி கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலின்போது, அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். எனினும், அங்கு அமைதி திரும்பவில்லை.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp