360 கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்

பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம்
360 கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்


பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
பிரத்யேக செயற்கைக்கோள் வழியாக இந்தப் படம் அனுப்பப்பட்டதையடுத்து, சாங் இ-4 ஆய்வுத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பூமியை நிலவு சுற்றி வருவதும், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும் ஒரே வேகத்தில் இருப்பதால் அதன் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ளது.
அதன் மற்றொரு பகுதியில் பெரும்பாலானவை, பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை உள்ளது. 
அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த மாதம் 8-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் கடந்த மாதம் 12-ஆம் தேதிநுழைந்த அந்த விண்கலம், நிலவின் இருண்ட பகுதியில் வெற்றிகரமாக இந்த மாதம் 3-ஆம் தேதி தரையிறக்கப்பட்டது.
பூமியிலிருந்து பார்க்கும்போது தெரியாத நிலவின் பின்புறத்தில் சாங் இ-4 ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால், அதனுடன் பூமியிலுள்ள கட்டுப்பாட்டகம் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, குவேகியாவ் என்ற செயற்கைக்கோளை சீனா கடந்த மே மாதம் விண்ணில் செலுத்தியது.
இந்த நிலையில், இதுவரை அறியப்படாத நிலவின் இருண்ட பகுதியை 360 டிகிரி கோணத்தில் - அதாவது எல்லா திசைகளையும் உள்ளடங்கிய முழு பரிமாணப் படத்தை, அந்த செயற்கைக்கோள் வழியாக சாங் இ-4 விண்கலம் தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com